Our Feeds


Thursday, August 27, 2026

Zameera

பெண்கள், சிறுவர்களின் படங்கள் விற்பனை – இணைய மோசடி குறித்து விசாரணை


 பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் மற்றும் குழுக்களை உருவாக்கி, பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்பனை செய்யும் இணைய மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.




ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த விடயம் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த இரு பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.




குறித்த இணையக் குழுக்களை ஆய்வு செய்தபோது, போலி கணக்குகளைப் பயன்படுத்தி நெருங்கியவர்கள் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை விற்பனை செய்ய முயற்சித்தமை தெரியவந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.




மேலும், இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.




இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சு முழுமையான கவனம் செலுத்தியுள்ளதுடன், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




இதனால், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் பழகும் நண்பர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அமைச்சு கோரியுள்ளது.




குடும்ப உறுப்பினர் ஒருவர் இத்தகைய மோசடியில் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அதற்கு அடிமையாகியிருந்தாலோ, அவர்களுக்கு உடனடியாக உளவியல் சமூக ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




இவ்வாறான சட்டவிரோதச் செயல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் உரிய சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் 1938 மற்றும் 1929 ஆகிய கட்டணமில்லா உதவி தொலைபேசி இலக்கங்களை சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.




இதேவேளை, இந்த அபாயகரமான நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடக ஆர்வலர்களும் பல்வேறு கட்டுரைகள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »