நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை விவகாரம் தொடர்பில் பல தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருவதை நாங்கள் அறிவோம். எனவே உண்மையான தகவல்களை தெரியப்படுத்த வேண்டிய கடமை எமக்குள்ளது என பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலி தெரிவித்தார்.
நீதித்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு மற்றும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதியமைச்சர் தலைமையிலான குழுவினர் ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர், செயலாளர் மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளதாக பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலி தெரிவித்தார்.
சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்த போதே கலாநிதி ரிஸ்வி சாலி இவ்வாறு தெரிவித்தார்....
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
ஜம் இய்யதுல் உலமாவின் தலைவரும் அதன் உறுப்பினர்களும் புரிந்துகொண்டு, "நாட்டிற்கு எது சிறந்ததோ அதைச் செய்யுங்கள் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என்று தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முஸ்லிம் சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
ஜம் இய்யதுல் உலமா சபை திறந்த மனதுடனும், பல விடயங்களைப் பற்றி மிக வெளிப்படையாக பேசியது குறித்து அமைச்சர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நாட்டின் அனைத்து சமூகங்களின் நல்வாழ்வுக்காக ஒன்றாக இணைந்து செயற்படக்கூடிய ஒரு சிறந்த தொடர்பாடல் வழியை ஏற்படுத்திக் கொண்டதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்றும் கூறினார்.
