நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளக்கக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பிய கடிதத்தில், சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ரஜீவ் அமரசூரிய இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த விளக்கக் கூட்டத்தில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருதரப்பாகக் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்த்ததாகவும், இதன் மூலம் முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான தங்களது கவலைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும் என எதிர்பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து, இந்த விடயத்தில் இருதரப்பு ஒருமித்த கருத்து இல்லை எனத் தோன்றுவதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இருதரப்பையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு உறுதிசெய்யப்படும் வரை குறித்த விளக்கக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.
