Our Feeds


Thursday, August 27, 2026

ShortNews

நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை!


நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட வெளிநாட்டினரில் இலங்கை நாட்டவர் எவரும் இல்லை என நேபாள சுற்றுலா திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது மொத்தம் 644 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 32 நாடுகளைச் சேர்ந்த 517 வெளிநாட்டினரும், 127 நேபாள நாட்டவரும் அடங்குகின்றனர்.


காணாமல் போன வெளிநாட்டினரில் இந்திய நாட்டவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களில் 178 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 65 அமெரிக்கர்கள், 53 உக்ரேனியர்கள், 51 மலேசியர்கள், 35 ஆஸ்திரேலியர்கள், 33 பிரித்தானியர்கள் மற்றும் 25 கனேடியர்கள் காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அத்துடன், சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலா 8 பேரும், லாட்வியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தலா 6 பேரும், ஜப்பான் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த தலா 5 பேரும் காணாமல் போயுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 4 பேரும், பெல்ஜியம் மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த தலா 3 பேரும் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இத்தாலி, அயர்லாந்து, கஜகஸ்தான், நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா இருவரும், பெலாரஸ், பல்கேரியா, பின்லாந்து, ஹங்கேரி, இஸ்ரேல், லிதுவேனியா, பிலிப்பைன்ஸ், செர்பியா, சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் காணாமல் போயுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் பாதுகாப்புப் படையினரும் நிவாரணக் குழுக்களும் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக நேபாள சுற்றுலா திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »