Our Feeds


Wednesday, August 26, 2026

SHAHNI RAMEES

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு - நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி பெரும் பலத்தை அளிக்கின்றன!

 

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வதற்காக, எல்லையற்ற பொறுமை மற்றும் கருணையின் வழியை வெளிப்படுத்திய முஹம்மது நபி(ஸல்) அவர்கள், மனிதகுலத்திற்கு அன்று முதல் இன்று வரை தோன்றிய மிகச் சிறந்த இறைத் தூதர்களில் ஒருவராவார். 23 ஆண்டுகள் அவர் எதிர்கொண்ட பல்வேறு இன்னல்கள் மற்றும் செய்த இணையற்ற தியாகங்களின் நோக்கம் அமைதி, சகோதரத்துவம், தூய்மை, நம்பகத்தன்மை மற்றும் நீதி நிலைகொண்ட ஒரு நல்ல சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும்.


இனம், சாதி, நிறம் அல்லது குலத்தின் அடிப்படையில் மனிதனை மதிப்பிடுவதை நிராகரித்த அன்னார், முழு மனிதகுலமும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியது என்பதையும், உண்மைத்தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் கருணை போன்ற உன்னத நற்பண்புகளால் மட்டுமே மேன்மையை அளவிட முடியும் என்பதையும் உணர்த்தினார். சமூகத்தில் உள்ள பணக்கார-ஏழை இடைவெளியை அகற்றி, ஒடுக்கப்பட்டவர்களுக்கும் உரிய உரிமைகளைப் பெற்றுத் தந்து, அவர் சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் முக்கிய அடித்தளத்தை அமைத்தார். சட்டத்தின் ஆட்சி நிலவும், நீதிமிக்க மற்றும் அனைவரையும் சமமாக நடத்தும் ஒரு நாட்டையும் சகவாழ்வுடனான சமூகத்தையும் உருவாக்கும் நமது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு தேவையான வழிகாட்டுதல் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளில் ஏராளமாக காணப்படுகின்றன.


மனிதர்களின் உளத் தூய்மையையும், சமூகத்தின் நன்னடத்தையையும் சீர்குலைக்கும் அனைத்துக் தீமைகளையும் இஸ்லாம் நிராகரிக்கிறது. எனவே, நமது தாய்நாட்டில்  பேரழிவாகப் பரவி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தேசிய செயற்பாடுகளைப் போன்ற, சமூக ஒழுக்கத்தை உயர்த்துவதற்கான திட்டங்களுக்கு நபிகளார் போதித்த இஸ்லாம் மார்க்கமும் அவரின் வாழ்க்கை முன்மாதிரியும் பெரும் பலத்தை அளிக்கின்றன.

உடைந்த உள்ளங்களைக் குணப்படுத்தி, வெறுப்பிற்குப் பதிலாக அன்பையும், பிணக்கிற்குப் பதிலாக சகோதரத்துவத்தையும் மதிக்கும் ஒரு புதிய யுகத்தை நோக்கிய பயணத்தில், நபிகள் (ஸல்) அவர்களினால் போதிக்கப்பட்ட இணையற்ற தியாகம் மற்றும் மனிதநேயத்தின் ஒளி அந்த பாதையைப் பிரகாசமாக்கும் என்பது எனது பலமான நம்பிக்கையாகும். நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி, அர்ப்பணிப்பு மற்றும் மேலான முயற்சிகளை உண்மையாக அர்த்தமுள்ளதாக்கி, நமது வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்துக் கொள்ள உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2026 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »