Our Feeds


Saturday, September 19, 2026

SHAHNI RAMEES

10 நிமிடம் தான் டைம்! கதவு தானாக திறந்துவிடும்... நியூயார்க்கில் நிறுவப்பட்ட இலவச பொது கழிப்பறைகள்...

 வாஷிங்டன்,


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கழிப்பறைகளை யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கழிப்பறைகள் திறந்திருக்கும். இந்த கழிப்பறைகள் இருக்கும் இடத்தை கண்டறிய பிரத்யேக மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



இவ்வாறு பல வசதிகள் இருந்தாலும், இந்த கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஒரு முக்கியமான விதி உள்ளது. அதாவது, கழிவறைக்கு உள்ளே சென்றுவிட்டால் 10 நிமிடத்திற்குள் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும். கழிவறையை பயன்படுத்த தொடங்கியதில் இருந்து கவுண்ட் டவுன் ஓடத் தொடங்கிவிடும். 5 நிமிடங்கள் ஆனவுடன் ஒரு ஆடியோ எச்சரிக்கை வரும். தொடர்ந்து 8-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு எச்சரிக்கை வரும்.




இதைத் தொடர்ந்து 10-வது நிமிடத்தில் கடைசியாக ஒரு

எச்சரிக்கை ஒலிக்கும். அதன் பிறகு சில வினாடிகளில் கழிப்பறையின் கதவு தானாக திறந்துவிடும். இத்தகைய நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த கழிப்பறையை நியூயார்க் நகரில் நிறுவுவது தொடர்பான அறிவிப்பை நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி வெளியிட்டார்.


இது குறித்து அவர் கூறுகையில், “கழிப்பறைகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளோம். கழிப்பறை என்பது செல்போனில் ஸ்கோரல் செய்து கொண்டிருக்கும் இடமாக இருக்கக் கூடாது” என்று தெரிவித்தார். இந்த நவீன கழிப்பறை திட்டத்திற்காக நியூயார்க் நகர நிர்வாகம் சுமார் 4 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.38 கோடி) செலவு செய்துள்ளதாக அவர் கூறினார்.


இத்தகைய கழிப்பறைகளை நிறுவுவதற்கு முன்னதாக, இது குறித்து ஆய்வுகளும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது சராசரியாக ஒரு நபர் மூன்றரை நிமிடங்கள் கழிப்பறையை பயன்படுத்துகிறார் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், எனவே 10 நிமிடங்கள் என்பது பெரும்பாலான நபர்களுக்கு போதுமான நேரமாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு நியூயார்க் நகர மக்களிடையே வரவேற்பு கிடைத்து வருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »