Our Feeds


Friday, September 25, 2026

Zameera

தேங்கியுள்ள 11 இலட்சம் வழக்குகளுக்கு துரித தீர்வு: 22ஆவது திருத்தத்தின் பிரதான நோக்கம்


 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)



நாட்டின் நீதித்துறை கட்டமைப்பில் தேங்கிக் கிடக்கும் சுமார் 11 இலட்சம் வழக்குகளை விரைவாகத் தீர்த்து, மக்களுக்கு துரிதமாக நீதியை வழங்குவதே 22ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்தியதன் பிரதான நோக்கமாகும் என ஊடகத்துறைப் பிரதி யமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முதலாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;


இன்றைய நிலையில் மக்களின் சராசரி ஆயுட்காலம் 73 வயதைத் தாண்டியுள்ளதுடன், பலர் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் ஆரோக்கியமாக நீண்ட காலம் பணியாற்றக்கூடிய நிலையில் உள்ளனர். 


எனவே, ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் அவர்களிடம் காணப்படும் அனுபவம் மற்றும் திறன்களை நாட்டின் நலனுக்காக தொடர்ந்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


பெறுமதிமிக்க மனித வளங்களை அரச கட்டமைப்பிலிருந்து விரைவாக வெளியேற்றாமல், அவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்துவது நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது.


நீதிமன்ற வழக்குகள் தாமதமடைவதற்கு காரணமாக உள்ள அரச பகுப்பாய்வு அறிக்கைகளை வழங்கும் நடவடிக்கையின் வேகம் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களின் உட்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், புதிய நீதிமன்றங்களும் நிறுவப்பட்டுள்ளன.


அத்துடன், நீதித்துறை நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் முன்னர் மந்தநிலையை எதிர்கொண்டிருந்த நீதியை வழங்கும் செயல்முறை தற்போது விரைவுபடுத்தப்பட்டுள்ளது.


மேலும் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது, நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டில் உறுதியான நிலைத்தன்மை அவசியமாகும். நீதியை வழங்கும் முறைமையின் வலிமையானது நீதித்துறையின் முதிர்ச்சியிலேயே தங்கியுள்ளது என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »