(செ.சுபதர்ஷனி)
செட்டியார் தெருவில் வியாழக்கிழமை (24) பொலிஸார் இருவர் நகைக்கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கொழும்பு மத்திய பொலிஸ் அத்தியட்சகரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.உலக வரைபடங்களை ஆராய்
புறக்கோட்டை செட்டியார் தெருவில் தங்க நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் வியாழக்கிழமை (24) பிற்பகல் பெரும் பதற்றமும் அமைதியின்மையும் ஏற்பட்டது.
தங்க நகைத் திருட்டுச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை முச்சக்கர வண்டியொன்றில் அழைத்து வந்த பொலிஸார், அவர் காட்டிய நபரைக் கொண்டு விசாரணைகளை நடத்த முற்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த சந்தேகநபர், அங்கு நின்ற நபரைக் காட்டி "இவர்தான் தங்க நகையை எடுத்தவர்" எனக் கூறிய பொய்யான குற்றச்சாட்டை அடுத்து, பொலிஸார் குறித்த நபரைத் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.
எனினும், பாதிக்கப்பட்ட ஜீவா என்ற நபர், சம்பவம் இடம்பெற்ற கடைக்கு கொடுக்கல் வாங்கல் அலுவல் தொடர்பாகவே அங்கு சென்றிருந்தேன். அப்போதே பொலிஸார் அங்கு வந்திருந்தனர். இதன்போது கடையிலிருந்த நபருக்கு சிங்கள மொழி சரியாகப் பேசத் தெரியாது. ஆகையால் அந்த தருனத்தில் நான் அவருக்கு உதவினேன். நான் அக்கடையிலிருந்து வெளியே வந்த போது, கடை உரிமையாளர் என்னை தொடர்புக் கொண்டு கடைக்கு மீண்டும் வருமாறு கூறினார். அப்போது அங்கு சென்ற என்னை பொலிஸார் இணைந்து தன்னைத் திருடன் எனப் பொய்யாகக் குற்றம்சாட்டி தாக்கியதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பொலிஸார் தனது சட்டையைக் கிழித்து, காது மற்றும் கை பகுதிகளில் காயம் ஏற்படும் வகையில் கடுமையாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டார். இவர் தான் தங்கநகையை எடுத்ததாக கூறியே சீருடை அணிந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும், சீருடை அணியாத சிவில் உடையில் இருவரும் இணைந்து என்னைத் தாக்கினார்கள். குறித்த உத்தியோகத்தர்கள் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என குறிப்பிட்டனர்.
நகைக்கடை உரிமையாளரை பொலிஸார் பலவந்தமாகத் தாக்கி அழைத்துச் செல்ல முயன்ற இச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமராக்களிலும் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, உண்மைத் தன்மையை ஆராயாமல் பொலிஸார் இவ்வாறு தாக்குதல் நடத்தியமைக்கு எதிராகவும், "எங்களை அடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை" எனக் கூறியும் அங்கிருந்த ஏனைய நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் திரண்டு தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அப்பாவி நபரைப் பொய்யான வழக்கில் சிக்கவைக்கத் திருடன் முற்படுவதாகவும், அதற்காகப் பொலிஸார் வர்த்தகர்கள் மீது கைவைக்கவோ தாக்கவோ முடியாது என்றும் கூறி நூற்றக்கணக்கான வர்த்தகர்கள் பொலிஸாரை சுற்றிவளைத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இச் சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் செட்டியார் தெருவிலுள்ள பல நகைக்கடைகள் தற்காலிகமாக அடைக்கப்பட்டதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக மேலதிக பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளையும் பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.