Our Feeds


Friday, September 25, 2026

Zameera

22ஆவது திருத்தம் தனிநபரை இலக்காகக் கொண்டதல்ல - விஜித ஹேரத்

 


(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)



அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தனி நபரை இலக்காகக் கொண்டு செய்யவில்லை. சகல விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து முறையாகவே இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறோம் இதன் மூலம். நீதி வழங்குவதில் நிலவும் தாமதங்களை நீக்கி மக்கள் வழங்கிய ஆணைக்கமைய எமது பொறுப்புகளை சரிவர செய்வோம் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.  


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


இந்த நாட்டில் இன்றிருப்பது நீதியை நிலைநாட்டும் அரசாங்கமாகும். அதற்காகவே மக்கள் ஆணை கிடைத்துள்ளது. தாமதிக்கும் நீதியானது மறுக்கப்படும் நீதிக்கு சமனாக கருதப்படுகின்றது.அதனால் மக்களுக்காக அந்த பொறுப்புகளை நிறைவேற்ற கடப்பட்டுள்ளோம். எமது நாட்டில் நீதித்துறையில் நிர்வாகக் கட்டமைப்பு சரியாக செயற்படாத காரணத்தினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வழக்குகள் தாமதமாகின்றன. குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். இதனால் முழு கட்டமைப்பிலும் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நீதித்துறையில் மட்டுமன்றி பொலிஸ் துறையிலும் பிரச்சினைகளை தீர்த்து அதிகமானவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதேபோன்று இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பிரச்சினைகளும் தீர்க்கப்படுகின்றன. அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட நீதித்துறையுடன் தொடர்புடைய சகல கட்டமைப்புகளிலும் மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன் முதற்கட்டமாகவே 22ஆவது திருத்தம் மூலம் நீதித்துறையில் மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. நாங்கள் இதனை தனி நபரை இலக்காகக் கொண்டு செய்யவில்லை. சகல விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து முறையாகவே இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.


இந்த திருத்தத்தை எமது அதிகாரத்தை உறுதிப்படுத்தவோ, தனிக் கட்சி ஆட்சியை அமைக்கவோ கொண்டுவரவில்லை. இப்போதுள்ள நீதிபதிகள் அனைவரும் எமது காலத்திற்கு முன்னர் பதவிக்கு வந்தவர்களே. இப்போது 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் இங்கு 4011 நீதிபதிகளே இருக்கின்றனர். பல வருடங்களாக வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன . இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் எங்களுக்கு இந்த விடயத்தில் எந்தவித அரசியல் நோக்கங்களும் கிடையாது. மக்களுக்கான சேவைகளே இதன்மூலம் கிடைக்கும்.


அதேநேரம் அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நீதித்துறை திருத்த சட்டமூலங்கள் ஊடாக நீதித்திறையில் அரசியல் ரீதியில் யாருக்கும் தலையீடுகளை மேற்கொள்ள முடியாது. அவ்வாறு செய்யப்போவதும் இல்லை. அத்துடன் தேங்கி நிற்கும் வழக்கு விசாரணைகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »