Our Feeds


Monday, September 14, 2026

Zameera

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக 24ஆம் திகதி ஆர்ப்பாட்டம்

 


(எம்.ஆர்.எம்.வசீம்)


ஜனநாயக விராேத அரசியலமைப்பின் 22 ஆவது  திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையையும் அமைதி வழியிலான ஆர்ப்பாட்டமொன்றையும் எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளோம். இதன் பொருட்டு முற்போக்கான மக்களின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பொன்று  ஞாயிற்றுக்கிழமை(13)  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.


இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனநாயகத்தையும், நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் சீரழித்து வருகின்றது. 22 ஆவது திருத்தத்திற்கு எதிராக முதன்முதலில் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது. எதிர்காலத்தில் இதற்கு எதிரான நடவடிக்கைகளையும் முன்னெடுப்புகளையும் ஜனநாயக ரீதியில் மேலும் வலுப்படுத்துவோம்.


தற்போது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, தனிக் கட்சி ஆட்சியை கொண்டு வந்து, நாட்டின் அதிகாரத்தை பெலவத்தைக்குக் கொண்டு செல்லும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும். மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர். பாராளுமன்றத்தில் 159 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்பதற்காக 220 இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்க இ்ந்த அரசாங்கத்துக்கு இடமளிக்க முடியாது. இதற்கு எதிராக பெரும் மக்கள் பலத்தை திரட்டுவோம்.


அதனால் 22ஆம் திருத்தம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படும்போது கொழும்பில் இருந்து நாங்கள் பெரும் மக்கள் பலத்தை அணி திறட்ட எதிர்பார்க்கிறோம். அதனால் நாட்டின் எதிர்காலம் எமது  எதிர்கால சந்ததியினருக்கும் எதிராக கொண்டுவரப்படும் இந்த மோசமான 22 ஆவது திருத்தத்தை தோற்கடிப்பதற்கான பெரும் நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசாங்கத்தை மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பது நிச்சயமாகும்.  அதனால் அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியைத் தோற்கடிக்கும் பெரும் நடவடிக்கையாக மக்கள் போராட்டத்தை  நாங்கள்  எதிர்வரும்  24 ஆம் திகதி மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம், எனவே அன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் பாராளுமன்றத்துக்கு செல்லும் வீதியில் அணித்திரண்டு தமது எதிர்ப்பை தெரிவிக்க முன்வர வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »