Our Feeds


Monday, September 21, 2026

Zameera

உயர் கல்வி கற்ற இளைஞர்களில் 43% பேருக்கு வேலை வாய்ப்பில்லை


 உயர் கல்வி கற்ற இலங்கை இளைஞர்களில் 43 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலையில்லாமல் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் 12 நாடுகளில் உயர் கல்வி கற்ற இளைஞர்களின் வேலையின்மை விகிதம் மிக அதிகமாக உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளது.


சர்வதேச நாணய நிதியத்தால் ஏப்ரல் 16 ஆம் திகதி நடத்தப்பட்ட ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பொருளாதாரக் கண்ணோட்டம் குறித்த விவாதத்தில் முன்வைக்கப்பட்ட இந்தத் தரவுகள், அந்த அமைப்பின் ‘Finance & Development’ சஞ்சிகையின் செப்டம்பர் இதழிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. கல்வி நிலை உயரும் போது வேலையின்மை குறைவதற்குப் பதிலாக அது அதிகரிக்கும் ஒரு அசாதாரண பிராந்திய போக்கு காணப்படுவதாகவும், அந்த நிலைமை இலங்கையிலேயே மிகவும் தீவிரமாகக் காணப்படுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.



தெற்காசியாவில் குறைந்தபட்ச மதிப்பைப் பதிவு செய்த பங்களாதேஷில் இந்த சதவீதம் 36 ஆக உள்ள நிலையில், இலங்கையின் மதிப்பு அதைவிட 7 சதவீதம் அதிகமாகும். மேலும், தாய்லாந்தில் உயர் கல்வி கற்ற இளைஞர்களின் வேலையின்மை விகிதமான 13.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இலங்கையின் மதிப்பு மூன்று மடங்கிற்கும் அதிகமாகும்.


கடந்த ஆண்டு தாய்லாந்தின் ஒட்டுமொத்த இளைஞர் வேலையின்மை 3.9% என்ற மிகக் குறைந்த அளவில் காணப்பட்ட போதிலும், அங்கு படித்த இளைஞர்கள் வேலையற்றோராக மாறுவதற்கான வாய்ப்பு சாதாரண இளைஞர்களை விட மூன்று மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்தது. இந்த இடைவெளி தென்கிழக்கு ஆசியா முழுவதும் காணப்பட்டாலும், தெற்காசிய பிராந்தியத்தில் இது மிகவும் பரந்த அளவில் காணப்படுவதாக அச்சஞ்சிகை வலியுறுத்துகிறது.



இலங்கையின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தரவுகளுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இலங்கை இளைஞர்களின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதமான 19.5 சதவீதத்தைப் போல் இரண்டு மடங்கிற்கும் அதிகமான மதிப்பை படித்த இளைஞர்களின் வேலையின்மை காட்டுகிறது.



அத்துடன், இது நாட்டின் ஒட்டுமொத்த தேசிய வேலையின்மை விகிதமான 3.9 சதவீதத்தைப் போல் 11 மடங்கு மதிப்பாகும். இலங்கையில் அனைத்து வயதுப் பிரிவினரையும் கருத்தில் கொள்ளும்போது, க.பொ.த உயர்தரம் மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதி கொண்ட நபர்களின் சராசரி வேலையின்மை 2024 இல் இருந்த 7.8 சதவீதத்தில் இருந்து 6.0 சதவீதம் வரை குறைந்திருந்த போதிலும், வேலைச் சந்தையில் புதிதாக நுழையும் உயர்தகுதி கொண்ட புதிய இளைஞர் சமூகமே வேலையின்மையின் தீவிரமான தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது என்பதை இந்த புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.



இந்த நெருக்கடி குறித்து விளக்கமளித்த IMF இன் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன், “உயர் கல்வி கற்ற இளம் தொழிலாளர்கள் தமது தகுதிகளுக்குப் பொருத்தமான வேலைகளைக் கண்டறிய முடியாமல் கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.


செயற்கை நுண்ணறிவின் (AI) விரிவாக்கம் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறன் உயரக்கூடும் என்ற போதிலும், தேவையான புதிய திறன்கள் வளர்ச்சி அடைவதற்கு முன்னரே செயற்கை நுண்ணறிவு பரவினால், அது இளம் தொழிலாளர்கள் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார். எனவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் வேலைச் சந்தையில் முதலாளிகளின் உண்மையான தேவைக்கு ஏற்ப தமது கல்வித் திட்டங்களை உடனடியாக மறுசீரமைக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.


இதற்கிடையில், அடுத்த தசாப்தத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் சுமார் 1.2 பில்லியன் இளைஞர்கள் புதிதாக தொழிலாளர் படையில் இணையவுள்ளதாக உலக வங்கி கடந்த ஜூன் மாதம் மதிப்பிட்டிருந்தது.


இது வரலாற்றில் இதுவரை பதிவான மிகப்பரிய இளைஞர் சமூகத்தின் வருகையாகும். ஆனால், தற்போதைய உலகளாவிய பொருளாதார வளர்ச்சி வேகம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்த மட்டத்தை விட மூன்றில் ஒரு பங்கினால் குறைந்துள்ள ஒரு கடினமான பொருளாதார சூழலிலேயே அவர்கள் வேலைகளைத் தேட வேண்டியிருக்கும் என்றும் உலக வங்கி மேலும் எச்சரித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »