(செ.கவிஷனா)
மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைச் முறையாகப் பராமரிப்பதன் மூலம் எரிபொருள் விலையை லிட்டருக்கு 50 முதல் 70 ரூபா வரை குறைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தும், அரசாங்கம் அதனைச் செய்யத் தவறியுள்ளது. கோதுமை மா உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் முறையான தீர்வுகளை காணாமல் எரிபொருள் விலை சூத்திரத்தின் ஊடாக அவ்வப்போது விலைகளைக் குறைப்பதும், குறிப்பிட்ட துறையினருக்கு மானியங்களை வழங்குவதும் போதுமான நடவடிக்கைகள் அல்ல என்று ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வியாழக்கிழமை (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,City & Local Guides
மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைச் சரியாகப் பராமரிப்பதன் மூலம் பெற்றோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 50 முதல் 70 ரூபா வரை குறைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தும், அரசாங்கம் அதனைச் செய்யத் தவறியுள்ளது. பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கோதுமை மா மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இரட்டைச் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
மறுபுறம், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் சொகுசு வாகனங்களும் வரம்பற்ற இலவச எரிபொருள் வசதிகளும் வழங்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் திறைசேரி ஊடாக 50 ரூபா வரி அறவிடப்படுவதைக் கண்டித்து, ஆட்சிக்கு வந்தால் அதனை நீக்குவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார். எனினும், திறைசேரியின் கடன்கள் முழுமையாகச் செலுத்தப்படவில்லை என்பதாலும், நிதியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதாலும் அந்த வரியை நீக்க முடியாது எனத் தற்போது அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
அதற்குப் பதிலாக, எரிபொருள் விலை சூத்திரத்தின் ஊடாக அவ்வப்போது விலைகளைக் குறைப்பது மற்றும் விவசாயிகள், மீனவர்கள் போன்ற குறிப்பிட்ட துறையினருக்கு மானியங்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதனிடையே, ஜனாதிபதியும் அமைச்சர்களும் அரசியல் கூட்டங்களுக்காகப் பயணங்களை மேற்கொண்டு வரும் சூழலில், உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாததால் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைப் பொருட்படுத்தாமல், அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்ற பெயரில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதுடன் அவர்களின் சம்பளத்தையும் உயர்த்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகச் சந்தேகங்கள் எழுகிறது என்றார்
