Our Feeds


Thursday, September 24, 2026

Zameera

போலி ஆவணங்கள் மூலம் மோசடி: 5 பேர் கைது

 


நுவரெலியா மாவட்ட செயலகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புகள் மற்றும் முத்திரைகளைப் போலியாகத் தயாரித்து, அரசாங்க வேலைவாய்ப்புகள், வீடுகள் மற்றும் கடன்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்த ஐந்து சந்தேகநபர்கள் நுவரெலியா கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 70 வயதுடைய நபர் ஒருவரும் நுவரெலியா, அட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளில் தகவல் தொடர்பு மையங்களை  நடத்திச் சென்ற நபர்களும் அடங்குவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனுக்குப் பதிலாக, மாவட்ட செயலகத்தின் பதில் கணக்காளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எனத் தங்களைக் காட்டிக்கொண்டு, அவர்களின் போலிக் கையொப்பங்களை இட்டே சந்தேகநபர்கள் இந்த மோசடியை முன்னெடுத்துள்ளனர்.


இவ்வாறு போலிக் கையொப்பமிட்டு பணம் பெறப்பட்ட நபர்களுக்கு, சந்தேகநபர்களால் வழங்கப்பட்ட கடிதங்களுக்கு இதுவரை எவ்வித பதில்களும் கிடைக்கப்பெறாததால், அது குறித்து மாவட்ட செயலாளருக்கு அனுப்பப்பட்ட சில கடிதங்களைப் பரிசீலித்தபோதே அக்கடிதத் தலைப்புகளும் கையொப்பங்களும் போலியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.



இதனையடுத்து, மாவட்ட செயலாளரினால் நுவரெலியா கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.


ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளைச் சேர்ந்த மேலும் சிலரின் ஒத்துழைப்புடன் பிரதேசவாசிகளிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட சந்தேகநபர்கள், அப்பணத்தைப் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்துவதற்காகப் போலியான முத்திரையிடப்பட்ட கடிதங்களை வழங்கியுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து போலியான முத்திரைகள், கடிதத் தலைப்புகள் மற்றும் அவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட கணினிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், தனது பெயரையும் மேலதிக மாவட்ட செயலாளரின் பெயரையும் பயன்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காகவும் பொதுமக்களிடம் இருந்து பணம் திரட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


குறித்த நிகழ்வுகளில் தாம் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, பின்னர் தவிர்க்க முடியாத காரணம் காரணமாக வரமுடியவில்லை எனத் தொலைபேசியில் அறிவித்து கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துமாறு தெரிவிக்கும் தந்திரோபாயத்தையும் இவர்கள் பயன்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


நுவரெலியா கோட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகரின் மேற்பார்வையில், கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »