(செ.கவிஷனா)
நாட்டில் நிலவி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக 8 மாவட்டங்கள் வறட்சியான வானிலையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகித் தனசூரிய கருத்து தெரிவிக்கையில்,
இந்த நிலமையினால் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 36 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் 47,368 குடும்பங்களைச் சேர்ந்த 154,167 நபர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பிரதேசங்களில் குடிநீர் ஆதாரங்களும் கிணறுகளும் முற்றிலும் வற்றிப்போயுள்ளதால், பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்கும் குடிநீருக்கும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நீர் தட்டுப்பாட்டைத் தணிக்கும் வகையில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் 35 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 40,945 குடும்பங்களுக்கு உட்பட்ட 132,748 நபர்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் அதிகபட்சமாக மொனராகலை மாவட்டத்தில் 08 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 13,139 குடும்பங்களின் 42,429 நபர்களுக்குக் குடிநீர் வழங்கி உதவப்படுகிறது. அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 11,142 குடும்பங்களின் 33,394 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 03 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 3,794 குடும்பங்களின் 12,047 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தமது பகுதி கிராமிய அனர்த்த நிவாரணக் குழு, பிரதேச செயலகம் அல்லது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 0716 807 807 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான குடிநீர் நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனறார்.