தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நீர்நிலைகள் நிரம்பி வழிதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ள
ஆசிய பிராந்திய நாடுகளில் எல் நினோ காலநிலை நிலைமையால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய மதிப்பீட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, எல் நினோ நிலைமை காரணமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் வறட்சியைக் காட்டிலும் அதிக மழைவீழ்ச்சியே பிரதான காலநிலை அபாயமாகக் காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும், டிசம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைவதால் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, காலநிலை அபாயங்களுடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியின் தாக்கமும் இணைந்து இலங்கையின் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
