(செ.கவிஷனா)
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டு, நாட்டில் தொடர்ந்து வெறுப்புணர்வையும், பொய்களையும் பரப்பி வருகிறது. ஊருக்கு ஊர், மாவட்டத்து மாவட்டம் சென்று அபிவிருத்தி திட்டம் குறித்து பேசாமல் வெறுப்பு பேச்சுகளை பரப்புவதன் மூலம் மக்களை தங்களின் பக்கம் வைத்திருக்க முடியும் என்று தவறாக கணக்கு போடுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமை காரியாலத்தில் இன்று (28) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,உள்ளூர் சுற்றுலா ஆராய்க
அரசாங்கத்துக்கா அல்லது எதிர்க்கட்சிக்கா அதிக மக்கள் ஆதரவு உள்ளது என்பதை அறிந்துகொள்ள உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். ஆட்சிக்கு வந்த ஒராண்டு காலத்துக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவோம் என வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி தற்போது பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைத்துத் தேர்தலை எப்படி நடத்தாமல் தள்ளிப்போடலாம் என்பதற்கான வழிகளையே தேடி வருகிறது. அத்துடன் தேர்தல் நடத்தப்பட்டால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில் ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் எதிர்க்கட்சியிலுள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைப்பது கடினமாகும்.
தற்போது ஊழல்வாதிகளைக் கைது செய்வதாக கூறப்படும் வழக்குகள் அனைத்தும் கடந்த நல்லாட்சி காலத்தில் தொடரப்பட்டவையாகும். தற்போதைய ஆட்சியின் கீழ் இடம்பெற்ற 323 கண்டெய்னர் விவகாரம் மற்றும் நிலக்கரி கொள்முதல் தொடர்பான முறையான விசாரணைகள் இன்னமும் நடத்தப்படவில்லை. ஆளும் கட்சியினருக்கு ஒரு சட்டம் ஏனையோருக்கு ஒரு சட்டம் என்று நடைமுறைப்படுத்த கூடாது. சட்டத்தின் நடுநிலைமை எங்கே சென்றது?
மேலும், கம்பஹாவுக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஜப்பானில் பெற்றதாகக் கூறப்படும் முன்னாள் சபாநாயகர் ரன்வலவின் கலாநிதி பட்டச் சான்றிதழைக் கொண்டு வந்து மக்களுக்கு காட்டுவார் என்றே கம்பஹா மக்கள் எதிர்பார்த்தார்கள். கம்பஹா மக்கள் அவருக்கு அதிக வாக்குகளை அளித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியதே அவர் கலாநிதி பட்டம் பெற்றவர் என்ற நம்பிக்கையில் தான். இருப்பினும் ஜனாதிபதி அந்த சான்றிதழைக் கொண்டுவரவில்லை. அத்துடன் தற்போதைய சபாநாயகர் மீதும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. 1988–89 காலப்பகுதியில் ஆயுத வன்முறை மூலம் கைப்பற்ற முடியாத அரச அதிகாரத்தை சட்டத்தின் உடாக சர்வதிகார பாதையில் சென்று கைப்பற்ற முற்படுகிறது.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கும் பாடம் புகட்டும் வகையில் நாய் வளர்ப்பு முதல் குடும்ப நிகழ்வுகள் மற்றும் டிஜே பயன்படுத்துவது வரை அனைத்து விடயங்களுக்கும் கட்டுபாடற்ற வரிகளை விதித்து வருகிறது. அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் டின் (TIN) இலக்கம் கட்டயாமக்கப்படுவதாகவும், அதனை மறுப்பவர்களுக்கு பாஸ்போர்ட், ஓட்டுநர் அனுமதிப் பத்திரம் வழங்குவது மற்றும் காணி வாகன விற்பனைகள் தடை செய்யப்படுட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை எரங்க குணசேகர எதிர்க்கட்சியிலிருந்த போது கடுமையாக விமர்ச்சித்து விட்டு இன்று ஆட்சியில் அமர்ந்து அதனை நடைமுறைப்படுத்துவதிலேயே அவர்களின் இரட்டை வேடம் தெரிகிறது. மேலும் நடப்பாண்டில் முதல் 5 மாதங்களில் மட்டும் 15,000 கோடிக்கும் அதிகமான தொகையிலான நகைகளை மக்கள் அடகு வைத்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 16.12 சதவீதம் அதிகரிப்பாகும். அதன் மூலமே உண்மையான பொருளாதார நெருக்கடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றார்