எம்.ஆர்.எம்.வசீம்)
நாமல் ராஜபக்ஷ்வை கைதுசெய்ததன் மூலம் அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் அநுராதபுர கூட்டத்துக்கு போதுமான பிரசாரத்தை வழங்கி இருக்கிறது.
அரசாங்கம் தனது இயலாமையை மறைப்பதற்கே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என ஐ்க்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
யார் தவறு செய்திருந்தாலும் அது தொடர்பில் விசாரணை நடத்தி, சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் எதிர்ப்பில்லை. ஆனால் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்போது தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருக்கும் முறைப்பாடுகள் தொடர்பானவர்களையே விசாரணைக்கு அழைத்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.
அரசாங்கத்தில் இருக்கும் பலருக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் பல முறைப்பாடுகள் கையளிக்கப்பட்டிருக்கின்றபோதும் அது தொடர்பில் எந்த விசாரணையும் இடம்பெறுவதாக தெரியவில்லை.
துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை, தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்தமை உள்ளிட்ட பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
அதேநேரம் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ்வுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருந்த முறைப்பாடு ஒன்றுக்காக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருந்தது.
பொதுஜன பெரமுன அடுத்தவாரம் அநுராதபுரத்தில் மக்கள் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கும் நிலையில், நாமலின் கைதானது, பொதுஜன பெரமுனவின் கூட்டத்துக்கு அரசாங்கம் பாரிய பிரசாரத்தை வழங்கி இருக்கிறது.
என்றாலும் அரசாங்கம் மக்களுக்கு செய்யவேண்டிய முக்கிய பல விடயங்கள் இருக்கும்போது, அவை அனைத்தையும் மறந்துவிட்டு எதிர்க்கட்சியினரை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் மூலம் அரசாங்கம் தனது இயலாமையை மறைப்பதற்கே முயற்சிக்கிறது என்றார்.
