(நமது நிருபர்)
தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற இரு ஆண்டுகளில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்கள் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாகும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனநாயகத்திற்கான சமூக ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் வியாழக்கிழமை (17) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கமானது பொறுப்பேற்ற காலப்பகுதியில் இருந்து தினந்தோறும் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த அச்ச உணர்வு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் போல அன்றி தினந்தோறும் யாருக்கு துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது என யோசிக்க வைக்கும் அளவுக்கு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
யுத்ததிற்கு பின்னரும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியை விடவும் அதிகளவிலான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இந்த ஆட்சியில் மீண்டும் தலைத்தூக்கியுள்ளன. இந்த ஆட்சியில் மக்களை எவ்வாறு வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
தற்போதைய அரசாங்கமானது பொறுப்பேற்று இரு ஆண்டுகளாகி விட்டது. இவர்கள் தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வோம் எனக் கூறி கொண்டே ஆட்சியைக் கைப்பற்றினர். இருப்பினும் இவர்களது ஆட்சிக் காலத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களை விட துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எங்கிருந்து இந்தளவு ஆயுதங்கள் கிடைக்க பெறுகின்றன.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் துப்பாக்கி சூட்டினால் உயிரிழப்பவர்கள் தொடர்பில் பாராளுமன்ற அமர்வுகளின் போது மரணித்தவர்கள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்ற பொய்யான விம்பத்தை உருவாக்குகின்றனர்.
அதனையே அவர்களது ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் பரப்புகின்றனர். துப்பாக்கி சூட்டின் ஊடாக பொதுவெளியில் நீதி கிடைக்கும் என நினைக்கின்றனர்.
இவ்வாறு துப்பாக்கித்துடன் தொடர்புடைய ஆயத கலாசாரம் அதிகரித்து வருவதனால் மக்கள் அச்சத்துடனேயே வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைத் தொடருமாக இருந்தால் அரசாங்கமானது கடும் பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றார்.