(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டில் படுகொலை கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர்களுடனும், அரச நிதியை கொள்ளையடித்து நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எமக்கு பைத்தியம் இல்லை.கட்சி அடிப்படையில் நாங்கள் சுயாதீனமாகவே செயற்படுகிறோம். ஊழல்வாதிகளுடனும், படுகொலையாளிகளுடனும் ஒன்றிணைய போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.Geographic Reference
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் சுயாதீனமாகவே செயற்படுகிறோம். அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை தொடர்ச்சியாக சுட்டிக்காட்டுவோம். ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளை சகல எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்க்கின்றன.
அரச நிதியை மோசடி செய்து நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய தரப்புடனும், படுகொலை கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர்களுடனும், ஊடக நிறுவனங்கள் மீது குண்டுத்தாக்குதல்கள் நடத்தியவர்களுடனும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எங்களுக்கு பைத்தியம் இல்லை என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் கிடையாது.நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களுக்கு நிச்சயம் தண்டனையளிக்க வேண்டும். அதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த இரண்டாண்டுக்குள் அரசாங்கம் என்ன செய்தது, ஏதும் இல்லை. மக்களுக்கு சொன்ன போலியான வாக்குறுதிகள் இன்று ஜனாதிபதிக்கே நினைவில் இருக்காது. அந்தளவுக்கு பொய்யுரைத்துள்ளார்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் உணவு மற்றும் சுகாதாரம் மீதான வெற் வரியை நீக்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் தற்போது அடிக்கடி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம், கொத்தமல்லியை பருகி வீட்டில் இருக்குமாறு குறிப்பிடுகிறார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை கடுமையாக விமர்சித்தே ஆட்சிக்கு வந்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுக்காலப்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டமே கடுமையாக செயற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டும் நாணய நிதியத்தின் புதிய திட்டம் முன்மொழியப்படுமா என்பதை அரசாங்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.