Our Feeds


Thursday, September 3, 2026

Zameera

உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ள சர்வதேச ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு அவசியம் :அணிசேரா மாநாட்டில் அருண் ஹேமச்சந்திரா வலியுறுத்து


 (க.சிவலிங்கமூர்த்தி)



அணிசேரா நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களின் முதலாவது மாநாட்டின் 65 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உயர் மட்ட நினைவூட்டல் மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அண்மையில் செர்பியாவின் பெல்கிரேட் நகருக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.


உலகளவில் மோதல்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மனிதநேய நெருக்கடிகள் சர்வதேச அமைப்புக்குத் தொடர்ச்சியாகச் சவால்களை விடுத்து வரும் பின்னணியில், புதுப்பிக்கப்பட்ட ஒற்றுமை, வலுவான சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கான அதிகளவிலான குரல் என்பவற்றின் அவசியத்தை இலங்கை சார்பில் பிரதி அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.Travel Guides & Travelogues


குறித்த மாநாட்டில் அவர் மேலும் உரையாற்றுகையில்,


தற்போது உலகம் ஒரு ஆழமான நிச்சயமற்ற காலப்பகுதியை எதிர்கொண்டுள்ளது. ஆயுதமேந்திய மோதல்கள் அதிகரித்து வருவதாலும், சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பேணுவதற்காக நிறுவப்பட்ட அமைப்புகளுக்கு அழுத்தம் அதிகரித்து வருவதாலும் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நெருக்கடிமிக்க காலங்களில் உலக நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமையே மிகவும் முக்கியமானது.



இயற்கைப் பேரழிவுகள், மனிதநேய அவசரநிலைகள், பொருளாதார அதிர்ச்சிகள் அல்லது ஆயுதமேந்திய மோதல்களை எதிர்கொள்ளும் நாடுகள் இவ்வாறான சவால்களைத் தனியாக எதிர்கொள்வதற்கு ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. அணிசேரா இயக்கம் என்பது உறுப்பு நாடுகளுக்கும் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்துக்கும் இடையில் நடைமுறை ரீதியான ஒத்துழைப்பு, காலத்துக்கு ஏற்ற உதவி மற்றும் பரஸ்பர ஆதரவை வழங்குவதற்கான ஒரு தளமாகத் தொடர்ந்து செயல்பட வேண்டும்.


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ், இலங்கை இறையாண்மை, பலதரப்புவாதம், அமைதியான சகவாழ்வு மற்றும் அனைத்து நாடுகளுடனுமான ஆக்கபூர்வமான ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு சுயாதீனமான மற்றும் கொள்கை ரீதியான வெளிநாட்டுக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றது.


வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டுக்குரலை வலுப்படுத்துவதற்கும், அணிசேரா இயக்கத்தின் ஊடாக அமைதி, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கும் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »