நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி, இலங்கை வம்சாவளி அவுஸ்திரேலியக் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட 43 அவுஸ்திரேலியர்கள் காணாமல் போயுள்ளனர்.கடற்கரைத் தீவுச்சுற்றுலாக்களை முன்பதிவு செய்தல்
அவுஸ்திரேலியாவின் வடமேற்கு சிட்னி பகுதியில் வசித்து வந்த சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் (42) மற்றும் அவர்களது மகன்களான அஷ்வின் (14), ஆருஷ் (11) ஆகிய நால்வரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
யாழ்ப்பாணம் - கோப்பாயைப் பூர்வீகமாகக் கொண்ட சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினர் ஆவர். இவர்களது இரு மகன்களும் அவுஸ்திரேலியாவிலேயே பிறந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் 'இமயமலை கிளேசியர் அட்வென்ச்சர்ஸ்' சுற்றுலாக்குழு மூலம் புனித கைலாச மலைக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தபோது, கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி இந்தப் இயற்கை பேரழிவு நிகழ்ந்துள்ளது.
26 ஆம் திகதி காலை உணவை முடித்துவிட்டு, நேபாள-சீன எல்லையான ரசுவாகதி பகுதி நோக்கி குடிவரவுப் பணிகளுக்காகப் புறப்படத் தயாராக இருந்தபோதே இவர்கள் குடும்பத்தினருடன் கடைசியாக தொடர்புகொண்டுள்ளனர்.
அதன் பின்னர் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் தொலைத்தொடர்பு, மின்சாரம் மற்றும் வீதிகள் முற்றிலும் சீர்குலைந்ததால், அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பயணித்த குழுவில் 15 அவுஸ்திரேலியர்கள் இருந்த நிலையில், தற்போது வரை நேபாள வெள்ளத்தில் 43 அவுஸ்திரேலியர்களைக் காணவில்லை என அவுஸ்திரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காணாமல்போன தம் உறவினர்களைப் பற்றிய தகவல்களைப் பெற அவுஸ்திரேலியாவில் உள்ள ஷைலஜாவின் சகோதரி மற்றும் குடும்பத்தினர் அதிகாரிகளையும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களையும் தொடர்ந்து தொடர்புகொண்டு வருகின்றனர்.
