Our Feeds


Sunday, September 20, 2026

ShortNews

தனது குடிமகனுக்காக எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை எடுப்பதே இந்த தருணத்தில் முன்னுரிமையாக இருக்க வேண்டும் - பைஸர் முஸ்தபா!


சவூதி அரேபியாவில் கடுமையான சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள இலங்கையைச் சேர்ந்த இளைஞரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இராஜதந்திர மட்டத்திலும் சட்டரீதியாகவும் அவசரமான மற்றும் வலுவான தலையீட்டை மேற்கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் இறையாண்மைக்கும் சட்டத்திற்கும் மதிப்பளிக்கும் அதே வேளையில், தனது குடிமகனுக்காக எடுக்கக்கூடிய அதிகபட்ச சட்ட மற்றும் மனிதநேய நடவடிக்கைகளை எடுப்பதே இந்த தருணத்தில் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் விவகாரம் தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் தீர்ப்பின் அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ பிரதி இதுவரை இலங்கைத் தூதரகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கிறது. தீர்ப்பின் சட்டப் பின்னணியை சரியாகப் புரிந்துகொள்வதற்கு அந்த எழுத்துப்பூர்வ ஆவணத்தை விரைவாகப் பெறுவது அத்தியாவசியமானது. சட்ட ஆலோசனைகளின்படி எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் சவூதி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யும் வாய்ப்பை தாமதமின்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த இளைஞன் சர்ச்சைக்குரிய பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து, சிறிது நேரத்தில் அது நீக்கப்பட்டு, அனோஜன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு, மனந்திரும்புதல், மன்னிப்பளித்தல் மற்றும் இரக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அமைவாக சவூதி அதிகாரிகளிடம் மனிதநேய நிவாரணம் அல்லது அரச கருணையை கோருவதற்கு வலுவான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நீண்டகால இராஜதந்திர உறவுகள் மற்றும் நட்புறவைப் பயன்படுத்தி, உயர்மட்ட அரச மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் இந்த இளைஞனின் உயிரைக் காப்பாற்ற வாய்ப்பு காணப்படுகிறது.அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கட்சி வேறுபாடின்றி இதற்காக இணைந்து செயற்பட வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்ட ரிசானாவின் விடயம் நினைவுப்படுத்தப்பட வேண்டும். முறையான சட்ட ஆலோசனைகள், நம்பகமான பிரதிநிதித்துவம் மற்றும் சரியான மொழிபெயர்ப்பு இல்லாமையால் கடந்த காலத்தில் செலுத்த வேண்டியிருந்த விலை மிகவும் வேதனையானது. வெளிநாடு ஒன்றில் இவ்வாறான பாரதூரமான சட்டப் பிரச்சினையை எதிர்கொள்ளும் எந்தவொரு குடிமகனுக்கும் ஆரம்பத்திலிருந்தே முறையான சட்ட ஆலோசனையும் இராஜதந்திர பாதுகாப்பும் தொடர்ச்சியாக கிடைக்க வேண்டும் என்பதை அந்த அனுபவம் உறுதிப்படுத்துகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »