Our Feeds


Sunday, September 20, 2026

Zameera

போலி ஆவணத் தயாரிப்பு : 48 கடவுச்சீட்டுகளுடன் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் ஊழியர் கைது


 போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காக பிறருக்குச் சொந்தமான 48 கடவுச்சீட்டுகளைத் தன்வசம் வைத்திருந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளர் ஒருவரை நவகமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.



சந்தேக நபரிடமிருந்து கடவுச்சீட்டுகள் மற்றும் பணத்தாள்களின் பாதுகாப்பு அடையாளங்களைச் சரிபார்க்கும் இயந்திரம் ஒன்றுடன் ஸ்மார்ட் கைபேசி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


கடுவலை, போமிரிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தூதரகங்கள் ஊடாக விசாக்களைப் பெறுவதற்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், நவகமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் கீழ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் இச்சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கைதான 70 வயதுடைய சந்தேக நபர், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் சுமார் 5 ஆண்டுகள் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியவர் என்றும், பின்னர் பத்தரமுல்ல பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றில் பணியாற்றியபோதே இக்கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்குச் செல்ல முற்படுபவர்கள், இதற்கு முன்னர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளனர் எனக் காட்டுவதற்காக, பழைய கடவுச்சீட்டுகளில் உள்ள விசா பகுதிகளை நீராவியைப் பயன்படுத்தி நுட்பமாக அகற்றி, புதிய கடவுச்சீட்டுகளில் போலியாக ஒட்டியுள்ளார்.


இவ்வாறான போலிச் செயலுக்கு ஒரு நபரிடமிருந்து 20,000 ரூபா வரை அறவிட்டுள்ளார். அவரிடமிருந்த 48 கடவுச்சீட்டுகளில் சுமார் 15 கடவுச்சீட்டுகளிலிருந்து விசா பகுதிகள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட 70 வயதுடைய சந்தேக நபர் கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »