Our Feeds


Sunday, September 20, 2026

Zameera

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் தாய்லாந்துப் பெண்கள் மூவர் கைது!


 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் "குஷ்" மற்றும் "ஹஷீஷ்" ஆகிய போதைப்பொருட்களைக் கடத்தி வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 3 பெண்கள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கைது செய்யப்பட்டவர்கள் தாய்லாந்தின் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களான 31, 36 மற்றும் 38 வயதுடையவர்கள் ஆவர்.


இவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை 12:50 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து தாய் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TG-307 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.


சந்தேக நபர்கள் கொண்டுவந்த பயணப்பொதிகளைச் சோதனையிட்டபோது, கூடுதல் ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் கொலாஜன் போத்தல்களுக்குள்ளும், வெளிப்புறத்தில் சவர்க்கார பாக்கெட்டுகள் போலத் தோற்றமளிக்கும் காற்றுப் புகாத பொதிகளுக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான 5 கிலோகிராம் 214 கிராம் "குஷ்" போதைப்பொருளும், 2 கிலோகிராம் 472 கிராம் "ஹஷீஷ்" போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.


கைது செய்யப்பட்ட 3 பெண்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


மேலும், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »