Our Feeds


Thursday, September 10, 2026

Zameera

ராஜ்நாத் சிங் இலங்கை விஜயத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் – முன்னிலை சோசலிசக் கட்சி

 



(க.சிவலிங்கமூர்த்தி)Travel Guides & Travelogues

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு வருகை தந்து கைச்சாத்திட்ட உண்மையான ஒப்பந்தங்கள் மற்றும் எட்டப்பட்ட உண்மையான உடன்படிக்கைகள் குறித்து அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நுகேகொடவில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு வருகை தந்து கெடட் பயிற்சி, பாதுகாப்புப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களின் பராமரிப்பை இலவசமாக மேற்கொண்டுள்ளமை போன்ற ஒப்பந்தங்களே கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும், அது தொடர்பில் நியாயமான சந்தேகம் ஒன்று எழுகிறது. இந்தியா போன்ற வல்லரசு நாட்டின் அமைச்சர் இலங்கைக்கு வருகை தருவது, இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள் அல்லது சாதாரண அரச அதிகாரிகளால் கைச்சாத்திடக்கூடிய அத்தகைய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்காக இருக்க முடியாது.


இந்தியப் பாதுகாப்பு அமைச்சரொருவர் இலங்கைக்கு வருகை தந்து தற்போது 38 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதற்கு முன்னர் அப்போதைய இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பந்த் 1988 ஆம் ஆண்டில்தான் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அதுவும், இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு மிகவும் சிக்கலான சூழலொன்று நிலவிய அந்தக்காலப் பகுதியில் அது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே அவர் வந்திருந்தார். நான்கு தசாப்தங்களுக்கு நெருக்கமான காலப்பகுதிக்குப் பின்னர் தற்போதைய வருகையானது கெடட் பயிற்சி அல்லது யுத்த ஆயுதப் பராமரிப்பு தொடர்பில் பேசுவதற்காக அமைந்திருக்க முடியாது. எனவே, உண்மையில் என்ன பேசப்பட்டது, எத்தகைய உடன்படிக்கைகள் எட்டப்பட்டன என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இதற்கு முன்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 2025 ஜனவரி இந்திய உத்தியோகபூர்வ பயணத்தின் போது பல உடன்படிக்கை ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தன. எனினும், அவைகள் எவை என்பது குறித்து இன்னமும் மக்களுக்குத் தெரியாது. 2025 ஏப்ரல் 5 ஆம் திகதியன்று இந்தியாவுடன் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அவற்றின் பிரதிகள் இன்னமும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.Executive Branch

அந்த ஏழு ஒப்பந்தங்களுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் உள்ளடங்கியுள்ளது. இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகை தருவது அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு மேலும் விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காகவே என இதற்கு முன்னர் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அரசாங்கம் இவை அனைத்தையும் மக்களிடமிருந்து மறைத்து வருகின்றது.

2025 ஏப்ரல் 5 ஆம் திகதி இந்தியாவுடனும், 2025 செப்டம்பர் 26 ஆம் திகதி ஜப்பானுடனும், 2025 நவம்பர் 14 ஆம் திகதி அமெரிக்க ஐக்கிய நாடுகளுடனும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அந்த மூன்று நாடுகளும் ஆசியாவின் நேட்டோ என அழைக்கப்படும் குவாட் யுத்தக் கூட்டணியின் நான்கு பங்காளிகளில் மூவராவர். இதன் ஊடாக இலங்கை ஆசியாவின் நேட்டோவுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கடந்த வாரத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் துய்யகொந்தா நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பொன்றுக்கு உடன்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை இத்தகைய உடன்படிக்கையொன்றுக்கு எட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். ஆசியாவின் நேட்டோவுடன் நிறுத்திக்கொள்ளாமல் பிரதான நேட்டோ அமைப்புடனேயும் இலங்கை பிணைக்கப்பட்டுள்ளதா? ஏன்ற சந்தேகம் உள்ளது. அரசாங்கத்தின் இந்தப் வெளிநாட்டுக் கொள்கையானது இலங்கையை ஒரு பூகோள அரசியல் பொறிக்குள் சிக்கவைக்கக் கூடும்.

புதிய அரசியல் கலாசாரம் ஒன்றுக்கான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த தற்போதைய இந்த அரசாங்கம், இவை அனைத்தையும் மக்களிடமிருந்து மறைத்து, மக்களின் தகவல் அறியும் உரிமைக்குத் தடை விதித்து, மிகமோசமான அரசியல் கலாசாரத்தையே பின்பற்றி வருகின்றது. எனவே, வெளிநாட்டு உறவுகள் துறையில் அரசாங்கம் எடுக்கும் அனைத்து நகர்வுகள் குறித்தும் உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இவற்றின் பிரதிகூலங்களை அரசாங்கத்தின் தலைவர்கள் மட்டும் அனுபவிக்கப் போவதில்லை, மாறாகச் சமூகம் முழுவதுமே எதிர்கொள்ள நேரிடும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »