Our Feeds


Monday, September 28, 2026

Zameera

செட்டியார் தெரு விவகாரம்: நாளை விசாரணை

 


(க.சிவலிங்கமூர்த்தி)


செட்டியார் தெருவில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில் நாளை 28ஆம் திகதி விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தமக்கு உறுதியளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் கேசரிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில்,


செட்டியார் தெருவில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் கொழும்பு மத்தி பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஸ் குமாரசிங்க ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினேன்.


செட்டியார் தெரு விவகாரம் தொடர்பில் எவரையும் கைது செய்ய முடியாது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். பொலிஸார் இனி எவரையும் தாக்க முடியாது. புறக்கோட்டை மற்றும் மாளிகாவத்தை பொலிஸார் இந்த விவகாரத்தில் தலையிடக்கூடாது.


நாளை 28ஆம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் கொழும்பு மத்தி பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஸ் குமாரசிங்க விசாரணை நடத்துவார். நாளை காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெறும்.


இது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய எனக்கு உறுதியளித்தார். இதையடுத்து, கொழும்பு மத்திய பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஸ் குமாரசிங்க, புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்


பொலிஸார் தமது கடமையை செய்யலாம். ஆனால், பொது மக்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது. அநீதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு. அதை பொலிஸார் தடுக்குமானால், நானே நேரடியாக களத்துக்கு வருவேன். இதனை நான் பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக தெரிவித்தேன்.



நான் தற்போது கொட்டகலை மரணச் சடங்கில் இருக்கிறேன். அதனால் தொலைபேசி ஊடாக பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் நேரடியாக உரையாடினேன் என மனோ கணேசன் மேலும் சுட்டிக்காட்டினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »