சவூதி அரேபியாவில் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கை இளைஞனின் பிரச்சினையில் நாங்கள் அதிகபட்சமாக தலையிடுவோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
'டிட்வா' சூறாவளியினால் சேதமடைந்த மாத்தளை - கண்டி ரயில் பாதையின் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிடுவதற்காக வத்தேகம பகுதிக்கு விஜயம் செய்திருந்த வேளையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், சவூதி அரேபியாவில் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கை இளைஞனின் பிரச்சினையில் நாங்கள் அதிகபட்சமாக தலையிடுவோம்.
வெளிவிவகார அமைச்சரும் வெளிவிவகார அமைச்சும் தற்போது அதில் தலையிட்டுள்ளன. ஜனாதிபதி செயலகமும் தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. நாங்கள் இதன் ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறோம். எந்தத் தாமதமும் இல்லை.
ஆனால், இவ்வாறான விவகாரங்களைக் கையாளும் போது இராஜதந்திர வழியிலேயே செய்ய வேண்டும். அந்த நாடுகளுக்கு என்று சட்டங்கள் உள்ளன. இருப்பினும், அவரை மீட்க நாங்கள் அதிகபட்சமாக தலையிடுவோம்.
பழைய ஊழல் நிறைந்த குடும்ப அரசியலையே எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துச் சென்றால், அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதாக அமையும் இந்த நாட்டு மக்களின் தேவைகளையும், நோக்கங்களையும் புரிந்துகொள்ளாமல் எதிர்க்கட்சிகள் பழைய ஊழல் நிறைந்த குடும்ப அரசியலையே முன்னெடுத்துச் செல்கின்றனர்.
அது அவர்கள் தம்மைத் தாமே அழித்துக்கொள்வது போலாகும். அவர்களே தங்களின் கட்சிகளையும் இல்லாமலாக்கிக் கொள்கிறார்கள்.
எதிர்வரும் 24ஆம் திகதி நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல எவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருபவர்களில் பெரும்பாலோர் அதிகளவு ஊழலில் ஈடுபட்டவர்கள் என்றே நான் நினைக்கிறேன்.
மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துதான் அந்த ஊழல்வாதிகளை திருகோணமலைக்கு துரத்தியடித்தார்கள். அப்படியானவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்வதால் நாட்டிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
இது பொதுமக்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு அமைத்த அரசாங்கம். அனைத்துத் துறைகளிலும் பொதுமக்களுக்கு சாதகமான ஒரு ஆட்சியை உருவாக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம்.
வீதிகளை அமைக்கும் போதும், கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் போதும், சம்பளப் பிரச்சினைகளைத் தீர்க்கும் போதும் இந்த நோக்கத்துடனேயே நாங்கள் செயல்படுகிறோம். நீதிமன்றச் சீர்திருத்தங்கள் மற்றும் திருடர்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளிலும் நாங்கள் அவ்வாறே செயல்படுகிறோம். மக்கள் தங்களுடைய அரசாங்கத்திற்குள் வந்து, தீர்மானங்களை எடுக்கும் நடைமுறையில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்."என தெரிவித்துள்ளார்.