Our Feeds


Monday, September 21, 2026

Zameera

தமிழர்கள் எங்கு சென்றாலும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்: சிறீதரன் எம்.பி

 


சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள் வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை, எங்கு சென்றாலும் நசுக்கப்படும் இனமாகவே நாம் வாழ வேண்டிய நிலை தொடருகின்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.




கரைச்சி பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தின் இறுதிநாள் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.




சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை அவமதித்து எழுதுவதும், அதற்குப் பதிலாக இஸ்லாமியர்களின் நபிகள் நாயகம் அவர்களை அவமதித்து எழுதுவதும் இரண்டுமே ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள்தான். ஆனால், ஒரு பதிவுக்குப் பதிலாக மற்றொரு பதிவு எழுதப்பட்ட நிலையில், இன்று ஒரு மனிதனின் உயிரே கேள்விக்குறியாகியுள்ளது. இவர் எழுதினார், அவர் பதில் எழுதினார். இவருக்குத் தலை போகிறது, அவர் வீட்டிலேயே இருக்கிறார். இதில் என்ன நியாயம் இருக்கிறது?




அனோஜனுக்கு எதிரான பதிவை மொழிபெயர்த்துக் கொடுத்தவர்களும் தமிழ் பேசும் சகோதர இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதன் தாக்கம் தமிழ்–முஸ்லிம் உறவில் ஆழமான விரிசலை ஏற்படுத்தக்கூடும். சிறிய பொறிகளே பெரும் தீயாக மாறுகின்றன. எனவே, அனோஜன் விடுதலை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்; அனைவரும் அதற்காகப் பிரார்த்திக்க வேண்டும்.




மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசும் கடந்த கால அரசுகளைப் போலவே இனவாதப் போக்கைக் கையிலெடுத்திருக்கிறது. அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்த தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் நினைவேந்தலில் ஒலிபெருக்கிப் பெட்டிகளைக் கூட பொலிஸார் பறித்துச் செல்லும் நிலையே காணப்படுகிறது. அப்படியானால் இந்த நாட்டில் ஜனநாயகம் எங்கே உள்ளது?" எனக் கேள்வி எழுப்பினார்.




கரைச்சிப் பிரதேச சபையின் உள்ளூராட்சி வார நிகழ்வுகளின் தொடர்ச்சியாக கலை நிகழ்வுகளும், வட்டார ரீதியான போட்டி நிகழ்வுகளும், நூல் அறிமுகங்களும், சிறப்பாக நடைபெற்றதுடன், மூன்று நாட்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சியும், நடைபெற்றது. இறுதி நாள் நிகழ்வில் வெற்றியாளர்களுக்கான பரிசில்களும், பயனாளிகளுக்கான வாழ்வாதர உதவித் திட்டங்களும் வழங்கப்பட்டன.




கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக கரைச்சி பிரதேச செயலாளர் தவச்செல்வம் முகுந்தன், கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் ஆகியோரும், விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகப் பொறியியலாளர் கதிரைமலைநாதன் கடம்பசீலன், துணுக்காய் வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் செல்வராஜ் செல்வகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »