இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவரைச் சந்தித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) இலங்கைக்கான தூதுவர் காலித் நசார் சுலைமான் அல்அமெரி (Khaleed Nasser Sulaiman AlAmeri) அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குமிடையே நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், வர்த்தகம், முதலீட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளும் இணைந்து செயற்படக்கூடிய புதிய துறைகளைக் கண்டறிவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இச்சந்திப்பின் போது, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், எண்ணெய் விநியோகம் மற்றும் எரிசக்தி விலைகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மற்றும் அது இலங்கையின் பொருளாதாரத்திற்கும் நுகர்வோருக்கும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.
அவ்வாறே, பிராந்தியத்தில் எழுந்துள்ள பாதுகாப்பு நிலைமைகளுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் சீரான வாழ்வு தொடர்பாகவும் பல கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குமிடையே நீண்டகால பொருளாதார மற்றும் மக்கள் இடையிலான உறவுகள் காணப்படுவதுடன், கணிசமான இலங்கைச் சமூகத்தினர் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்தும் வருகின்றனர்.
முன்னேற்றம் கண்டு வரும் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்குமிடையேயான பொருளாதார பங்காண்மையை பலப்படுத்துவதற்கும், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் நிலவும் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கு காணப்படும் வாய்ப்புகள் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது மேலும் ஆராயப்பட்டன. அண்மைக் காலத்தில் ஐக்கிய அரபு அமீரகம் - இலங்கை இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் விரிவான பொருளாதார மற்றும் சுற்றுலா ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என்பவற்றுக்கு அதிக பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய நெருக்கமான உறவுகளைப் பேணுவதன் மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளைக் கண்டறிவதன் அவசியத்தையும் இரு தரப்பினரும் இதன்போது வலியுறுத்தினர்.
வலையொளி இணைப்பு-
https://youtu.be/7dI9TAv8I3I