களுத்துறை தெற்கு புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று (16) புதன்கிழமை புகையிரதத்தில் மோதி இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரத்திற்குச் செல்லும் புகையிரதத்தில் ஏறுவதற்காக, களுத்துறை தெற்கு புகையிரத நிலையத்தின் தெற்குப் பகுதியில் உள்ள நடைமேடையை சென்றடைய இவர்கள் புகையிரத தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர்.
இதன்போது மருதானையிலிருந்து காலி நோக்கிப் பயணித்த சேவைப் புகையிரதம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் உறவுக்கார மகள் ஆகியோர் மருதானையிலிருந்து காலி நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் மோதியுள்ளதில், தாயும் உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுத்துறை ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்கள் பாதுகாப்பற்ற முறையில் தண்டவாளத்தில் நடந்து சென்றதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இரு பெண்களின் சடலங்களும் களுத்துறை தெற்கு புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.