(எம்.மனோசித்ரா)
கொழும்பு துறைமுக நகரத்தில் பிரம்மாண்ட திட்டத்தை முன்னெடுப்பதற்காகப் பிறைம் மெல்வா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தை 'மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வணிகமாக' பெயரிடுவதற்கும், அதற்குரிய சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிறைம் மெல்வா நிறுவனம் எதிர்வரும் சில ஆண்டுகளில் 112.2 மில்லியன் டொலர் மற்றும் 15.9 பில்லியன் இலங்கை ரூபாவை முதலீடு செய்யவுள்ளது. இம்மாபெரும் முதலீட்டின் மூலம் கொழும்பு துறைமுக நகரத்தில் அடையாளமிக்க கலப்பு-பயன்பாட்டு நீர்முனை அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 800 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், வணிகமொன்றை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வணிகமாகப் பெயரிடுவதற்கும், அத்தகைய வணிகங்களுக்கு வரி விலக்குகள் அல்லது ஊக்குவிப்புகளை வழங்குவதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் அவசியமாகும்.
அதற்கமைய, துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் ஏற்பாடுகளைப் பின்பற்றி உத்தேசிக்கப்பட்டுள்ள விலக்குகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்குவதற்கும், பிறைம் மெல்வா நிறுவனத்திற்கு முதன்மை வணிக அந்தஸ்தை வழங்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.