இலங்கையில் உள்ள ரோஹிங்யா அகதி ஐ.நா மனித உரிமைகள்
பேரவையில் விடுதலை கோரி முறையீடுஇலங்கையில் வாழும் ரோஹிங்யா அகதி ஒருவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வில் நேரடியாக முறையீடு செய்து, இலங்கையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ரோஹிங்யா அகதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தலையீடு 'பாக்ஸ் ரொமானா' (Pax Romana) அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது.
பேரவையில் பேசிய அந்த அகதி, சுதந்திரம் வழங்கப்படும் வரை, குழந்தைகள் உட்பட ரோஹிங்யா நாட்டினருக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகர் (UNHCR), வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனிதநேய அமைப்புகளை அணுக அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்களின் துயரங்களும் அனுபவங்களும் அவர்களின் அகதி அந்தஸ்தை நிரூபிப்பதாகக் கூறி, அவர்களை "சட்டவிரோத குடியேறிகள்" என்று முத்திரை குத்தக்கூடாது என்று அவர் வாதிட்டார்.
2024 டிசம்பரில் யாழ்ப்பாணக் கடற்பகுதியில் ரோஹிங்யா அகதிகளை மீட்ட இலங்கை கடற்படைக்கு பாராட்டு தெரிவித்த அவர், அதேவேளையில் வாழ்வாதாரம், இருப்பிடம், உணவு, கல்வி மற்றும் சுகாதார சேவைகள் போன்ற அடிப்படை உரிமைகளை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குடியுரிமை அற்ற மற்றும் இனப்படுகொலையை எதிர்கொண்ட ரோஹிங்யா மக்களின் அவல நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், வேறு எந்த நாட்டிலும் மீள்குடியேற முடியாத அகதிகளுக்கு குடியுரிமை அல்லது நிரந்தர வசிப்பிட உரிமையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை அரசை கேட்டுக்கொண்டார்.
மேலும், ரோஹிங்யா அகதிகளுக்கு ஆதரவளிக்கும் இலங்கை மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், கண்காணிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் இந்த முறையீடு கோரியுள்ளது.
உரையின் பகுதி:
"என் பெயர் முகமது அன்வர். நான் இலங்கையில் வாழும் ஒரு ரோஹிங்யா அகதி. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மற்றும் மியான்மர் தொடர்பான சுயாதீன புலனாய்வு பொறிமுறையின் அறிக்கைகள் மீது கவனத்தை ஈர்க்கின்றேன்.
2022 டிசம்பரில் யாழ்ப்பாணத்திற்கு அப்பால் உள்ள கடலில் இருந்து சுமார் 105 ரோஹிங்யாக்களை மீட்ட இலங்கை கடற்படைக்கு நாங்கள் நன்றி தெரிவிப்பதுடன், பாணந்துறையைச் சுற்றி குடியேறியுள்ள அனைத்து ரோஹிங்யா அகதிகளுக்கும் வாழ்வாதாரம், இருப்பிடம், உணவு, கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான உரிமைகளை இலங்கை அரசாங்கம் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
2024 டிசம்பரில், இரு படகுகள் மூழ்கி ஆறு பேர் உயிரழந்த மிகக் கடுமையான கடல் பயணத்திற்குப் பிறகு, 57 குழந்தைகள் உட்பட சுமார் 116 ரோஹிங்யாக்கள் இலங்கையை வந்தடைந்தனர். அவர்களின் துன்பங்கள், வன்முறை, இடம்பெயர்வு மற்றும் பயம் ஆகியவை அவர்களின் அகதி அந்தஸ்தை நிரூபித்த போதிலும், இந்த குழுவினர் இலங்கையில் 20 மாதங்களுக்கும் மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் மனிதநேய உதவிகளுக்கான அணுகல் மிகவும் வரம்புக்குட்பட்டதாக உள்ளது.
எனவே, அவர்களை விடுவிக்குமாறும், UNHCR, வழக்கறிஞர்கள், மனிதநேய அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர்கள் எந்தவித தடங்கலுமின்றி அவர்களை அணுகுவதை உறுதி செய்யுமாறும், அகதிகளை 'சட்டவிரோத குடியேறிகள்' என்று குறிப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உண்மை கண்டறியும் குழு, ரோஹிங்யாக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்துள்ளதாகவும், மியான்மரில் இன்னும் இருக்கும் மக்கள் இனப்படுகொலை அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. நாங்கள் ரோஹிங்யா நாட்டினரும், நாடு இல்லாத மக்களும் ஆவோம்.
அதன்படி, வேறு எந்த நாட்டிலும் மீள்குடியேற முடியாத ரோஹிங்யா மற்றும் ஏனைய அகதிகளுக்கு குடியுரிமை அல்லது நிரந்தர வசிப்பிட உரிமையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.
எங்களுக்கு ஆதரவளிக்கும் இலங்கை மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், கண்காணிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறும் கேட்டுக்கொள்கிறோம்."