Our Feeds


Thursday, September 10, 2026

SHAHNI RAMEES

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது: உயர் நீதிமன்றம் அதிரடி!




பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே

ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டப்படி செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் இன்று (10) வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.


நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.


மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலித்தே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.


ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு 06 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.


2018 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் இத்தண்டனையை உறுதி செய்திருந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி வெலிக்கடைச் சிறையிலிருந்து விடுவித்தார்.


மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்  சார்பாக ஜனாதிபதி சட்டதரணி விரான் குரே, லுவி கணேஷதாசன் ஆகியோரும், சந்தியா எக்னெலிகொட சார்பாக சட்டதரணி அஸ்திக தேவேந்திரா மற்றும் புலஸ்தி ஹேவமான்ன ஆகியோரும் முன்னிலையாகியிருந்தனர்.


ஞானசார தேரர் சார்பாக திஷ்ய வேரகொடவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பாக ஜனாதிபதி சட்டதரணி பைசர் முஸ்தபா ஆகியோரும் முன்னிலையாகியிருந்தனர்.


ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அதிகாரமானது தன்னிச்சையாகப் பயன்படுத்தப்பட முடியாது என்பதையும், அது சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டது என்பதையும் இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »