Our Feeds


Friday, September 18, 2026

Zameera

எரிசக்தி இருப்பை விட தொழில்நுட்ப திறனே முக்கியம் – பாட்டலி


 (க.சிவலிங்கமூர்த்தி)



எதிர்கால போட்டி உலகில் எரிசக்தியை யார் வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டிலும், அதனை பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் இராணுவ சக்தியாக மாற்றுவதற்கான தொழில்நுட்பத் திறனை  யார் கொண்டிருக்கிறார்கள் என்பதே எதிர்கால மூலோபாயப் போட்டியில் முக்கியத்துவம் பெறும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.


அண்மையில் பீஜிங்கில் நடைபெற்ற 13ஆவது பீஜிங் சியாங்ஷான் கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்


உலகின் எரிசக்தி மாற்றங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்களுடன் தொடர்புபட்டுள்ளன. முதலாவது கைத்தொழில் புரட்சியில் நிலக்கரி மற்றும் நீராவி முக்கியத்துவம் பெற்றன. பின்னர் எண்ணெய், மின்சாரம், உள் எரிப்பு இயந்திரங்கள் மற்றும் அணுசக்தி ஆகியவை உலகின் பொருளாதார மற்றும் இராணுவ சக்தியை தீர்மானிக்கும் காரணிகளாக அமைந்தன.


இன்று உலகம் மற்றுமொரு முக்கியமான மாற்றத்தை எதிர்கொள்கிறது. செயற்கைக்கோள் தொழில்நுட்பம், அரிதான கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு, ஐதரசன், இணைவு ஆற்றல், சிறிய அணுமின் உற்பத்தி அமைப்புகள், புத்திசாலி மின்வலையமைப்புகள், மின்கலத்  தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி தொழில்நுட்பம் ஆகியவை எரிசக்தியின் எதிர்காலத்தை மாற்றுகின்றன.



எனவே, எதிர்காலப் போட்டி எரிசக்தி வளங்களை வைத்திருப்பதற்காக மட்டுமல்ல. அந்த எரிசக்தியை பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் இராணுவ சக்தியாக மாற்றக்கூடிய தொழில்நுட்பத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதற்காகவும் அமையும்.


இராணுவத்துறையிலும் இதன் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது. பாரம்பரியமாக நிலம், கடல் மற்றும் வான்வெளி ஆகியவை இராணுவ நடவடிக்கைகளின் முக்கிய தளங்களாக இருந்தன. தற்போது விண்வெளி, ஆளில்லா விமானங்கள், இணையவழிப் போர், செயற்கை நுண்ணறிவு மற்றும் தன்னியக்க அமைப்புகள் ஆகியவையும் இதில் இணைந்துள்ளன.


இதனால் எதிர்கால இராணுவ நடவடிக்கைகளுக்கான எரிசக்தி விநியோக முறைகளும் மாற்றமடையக்கூடும். 


நீண்ட தூரங்களில் எரிபொருளை எடுத்துச் செல்லும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, உள்ளூரிலேயே எரிசக்தியை உற்பத்தி செய்து சேமிக்கும் பரவலாக்கப்பட்ட அமைப்புகள் முக்கியத்துவம் பெறலாம்.


இலங்கை போன்ற நாடுகளுக்கு எரிசக்திப் பாதுகாப்பு என்பது எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான வழிகளை மாத்திரம் தேடுவதல்ல. எரிசக்தி அமைப்பையே மாற்றியமைத்து, மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சேமிப்பு, மின்வலையமைப்பு மற்றும் குறைக்கடத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உள்நாட்டு திறனை வளர்ப்பது அவசியமாகும்.


முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக நான் சூரிய மின்சக்தி திட்டங்கள், லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையம், மின்சார பரிமாற்றக் கட்டமைப்புகள் மற்றும் கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.


உலக தெற்கின் நாடுகளுக்கு இந்த எரிசக்தி மாற்றம் சவாலும் வாய்ப்பும் ஆகும். புதிய தொழில்நுட்பங்களைச் சார்ந்திருக்கும் நிலை உருவாகக்கூடிய அதேவேளை, புதிய எரிசக்தி அமைப்புகள் மூலம் தமது மூலோபாய வலிமையை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பும் உள்ளது.


எரிசக்தி வளங்களை வைத்திருப்பது மாத்திரம் பொருளாதார அல்லது அரசியல் சக்திக்கு உத்தரவாதம் அளிக்காது. எரிசக்தியை திறமையாகவும் அறிவார்ந்த முறையிலும் சுயாதீனமாகவும் பயன்படுத்துவதற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறனைக் கொண்ட நாடுகளே எதிர்காலத்தில் அதிகமான மூலோபாய வலிமையைப் பெறும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »