கண்டி நகர் மற்றும் அதனை அண்மித்து வாழும் தமிழ் மாணவர்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பாடசாலையொன்றை அனைத்து வசதிகளுடனும் தரமுயர்த்துவது குறித்து பிரதமர் ஹரினி அமரசூரிய கவனம் செலுத்தியுள்ளார்.
கண்டி நகர் மற்றும் அதனை அண்மித்துள்ள தமிழ் மாணவர்களின் கல்வி தேவையை முழுமைப்படுத்தக்கூடிய வகையிலான தமிழ் பாடசாலையொன்று இல்லாமை தொடர்பில் ஊடகவியலாளர் ரஞ்ஜன் அருண் பிரசாத், கல்வி அமைச்சர் என்ற விதத்தில் பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கு அனுப்பிய கடிதமொன்றை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி நகர் மற்றும் அதனை அண்மித்துள்ள தமிழ் மாணவர்களின் கல்வியை முழுமைப்படுத்துவது தொடர்பில் பாடசாலையொன்றை தரமுயர்த்துவது குறித்து ஆராயுமாறு பிரதமரின் பொதுமக்கள் தொடர்பு சிரேஷ்ட உதவி செயலாளர் சுராணி டி சிறிமன்னவினால், மத்திய மாகாண கல்வி செயலாளர் மதுபாணி பியசேனவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கண்டி நகர் மற்றும் அதனை அண்மித்துள்ள தமிழ் மாணவர்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்வதற்கு பேராதனை இந்து கல்லூரி, இந்து சிரேஷ்ட பாடசாலை, விவேகானந்தா வித்தியாலயம், கலைமகள் வித்தியாலயம், சிவானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் காணப்படுகின்றன.
எனினும், கல்வி உள்ளிட்ட மேலதிக கற்றல் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வதற்கான வசதிகள் இந்த பாடசாலைகளில் இல்லாமை பல தசாப்த காலமாக இந்த பகுதி மாணவர்கள் எதிர்நோக்கி வரும் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கான மைதானம் இல்லாமை, மேலதிக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இந்த பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன், இந்த பாடசாலைகளில் இடவசதி பற்றாக்குறை பாரிய சவாலான விடயமாக மாணவர்களுக்கு காணப்படுகின்றது.
கண்டி நகரை அண்மித்துள்ள சிவானந்தா வித்தியாலயத்தில் மைதானம் உள்ளிட்ட வசதிகள் இருந்த போதிலும், அந்த பாடசாலை தரமுயர்த்தப்படாதுள்ளமை மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக அந்த பாடசாலையும் சற்று பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில், தமிழ் மாணவர்களை சிங்கள பாடசாலைகளுக்கு கீழ் இயங்கும் தமிழ் மொழி மூல பிரிவுகளை உள்ளடக்கிய, அனைத்து வசதிகளையும் கொண்ட சில்வஷ்டர் மற்றும் புனித அந்தோனியார் கல்லூரி ஆகியவற்றுக்கு சேர்க்க பெற்றோர் முயற்சி செய்கின்ற போதிலும், அந்த பாடசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தமிழ் மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர்.
குறிப்பாக வருடமொன்றிற்கு 30 முதல் 35 தமிழ் மாணவர்கள் மாத்திரமே இந்த பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுகின்றமையினால், ஏனைய தமிழ் மாணவர்கள் எந்தவித வசதிகளும் இல்லாம ஏனைய தமிழ் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையினால், பல்வேறு திறமைகளை கொண்ட தமிழ் மாணவர்களின் திறமைகள் வெளிவராது முடங்கி போகின்ற சூழ்நிலை கடந்த பல தசாப்தங்களாகவே கண்டி நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், கண்டியை அண்மித்துள்ள பெருந்தோட்ட பகுதிகள் மற்றும் நகர் பகுதிகளில் வாழும் மலையக தமிழர்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால், மைதானம் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளடங்கிய வகையிலான தமிழ் பாடசாலையொன்றை கண்டி நகர் அல்லது கண்டி நகரை அண்மித்த பகுதியொன்றில் அமைத்து தருமாறு பலர் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையிலேயே, பிரதமரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில், பிரதமர் இந்த விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி, விடயங்களை ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மத்திய மாகாண கல்வி திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.