(எம்.மனோசித்ரா)
மஹரகம வைத்தியசாலையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 'ஃபில்கிராஸ்டிம்' (Filgrastim) மருந்துக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தி உள்ளூர் சந்தையில் அவசரக் கொள்வனவுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,Travel Guides & Travelogues
மஹரகம வைத்தியசாலையின் பிரதானிகள் மற்றும் நிபுணத்துவ வைத்தியர்களுடன் இது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களிடம் உள்ள மருந்து இருப்புகளை அரசாங்க நிதியைக் கொண்டு நேரடியாக விலைக்கு வாங்கி வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மஹரகம வைத்தியசாலையில் சில நாட்கள் இம்மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவியபோதிலும், ஏனைய வைத்தியசாலைகளில் மருத்துவ விநியோகப் பிரிவின் வசமிருந்த இருப்புகளைக் கொண்டு நிலைமை சீரமைக்கப்பட்டன. தற்போது அவசரக் கொள்முதல் மூலம் மருந்துகள் தொடர்ந்து பெறப்பட்டு வருவதால் நிலைமை இயல்புநிலைக்குத் திரும்பி வருகின்றன.
சுமார் 300,000 மருந்தளவுகள் அடங்கிய பெருமளவு கொள்முதல் முற்பதிவில் முதற்கட்டமாகச் சில தொகுதிகள் நாட்டை வந்தடைந்துள்ளன.
விநியோக நிறுவனம் மேலும் 15,000 மருந்தளவுகளைக் கொண்டுவரவுள்ளோம். அதற்கமைய, ஒப்பந்தத்தின் மீதமுள்ள முற்பதிவுகளை சீன நிறுவனத்திடமிருந்து விரைவாக இறக்குமதி செய்வதற்காகக் கடன் கடிதம் திறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, ஏற்கனவே கொண்டுவரப்பட்ட சில மருந்துத் தொகுதிகளின் வெளிப்பெட்டியில் தகவல்கள் இருந்தபோதிலும், சிரிஞ்சுகளில் தேவையான சில விபரங்கள் விடுபட்டிருந்தன. அரச கொள்முதல் விதிகளுக்கு அமைவாகவும் நீதிமன்ற உத்தரவு இன்றியும் இவ்வாறான குறைபாடுகள் கொண்ட தொகுதிகளைப் பொறுப்பேற்க முடியாது.
எனவே, சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உள்ளூர் சந்தைக் கொள்முதல் மற்றும் வெளிநாட்டு இறக்குமதிகளை விரைவுபடுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு மருந்து தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
