(செ.கவிஷனா)
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிகப்பலத்த மழை பதிவாகி சீரற்ற வானிலை நிலவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திப்பவல் பகுதியில் 195.7 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதுடன், கேகாலை, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. இந்தச் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மாதம்பை - மெல்லவாகார வீதியில் உள்ள களு அத்துர வான்கதவின் வெள்ளப்பெருக்கில் சிக்கி நபர் ஒருவர் அடித்துச் செல்லப்படட்டுள்ளார். நாட்டின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 206 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் 2,826 குடும்பங்களைச் சேர்ந்த 10,311 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 28 வீடுகள் முழுமையாகவும், 1,807 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் 3 பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இத்தொடர் மழை காரணமாகக் களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து இரத்தினபுரி மற்றும் நாவலப்பிட்டியின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரத்தினபுரியில் களு கங்கையின் நீர்மட்டம் 7 அடியைத் தாண்டியதால் தாழ்நிலப் பகுதிகளும் வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
அத்துடன் களனி கங்கை, அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கம்பஹாவின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இரத்தினபுரி - பாணந்துறை A8 பிரதான வீதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துத் தடைப்பட்டு, பின்னர் பொலிஸாரினாலும் பிரதேச வாசிகளினாலும் சீர்செய்யப்பட்டது.
இதனிடையே, மழைநீரைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 14 பிரதான நீர்தேக்கங்களின் வான் பாய்ந்து வருவதுடன் குகுலே கங்கை, பொல்கொல்ல, விமலசுரேந்திர, லக்ஷபான, மேல் கொத்மலை, தம்புள்ளை இப்பன்கட்டுவ, கலா வாவி, தெதுரு ஓயா, நோர்ட்டன் கேனியன் மற்றும் இராஜாங்கனை ஆகிய நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தம்புள்ளை ஓயா நீர்தேக்கத்தின் வான் கதவு திறக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கன அடி நீரும், கலா வாவியின் இரண்டு அவசர வான் கதவுகள் 6 அங்குல உயரத்திற்குத் திறக்கப்பட்டு நீரும் வெளியேற்றப்பட்டு வருகின்றன.
இராஜாங்கனை நீர்தேகத்தின் 8 வான் கதவுகள் (அதில் 6 கதவுகள் மூலம் வினாடிக்கு 3,827 கன அடி நீர்) திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விக்டோரியா நீர்தேக்கம் தனது அதிகபட்சக் கொள்ளளவை எட்டியுள்ளதால் அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படவுள்ளதுடன், காசல்ரீ நீர்தேக்கமும் வான்பாயும் மட்டத்தை அடைந்துள்ளது. இதனால் ஆறுகள் மற்றும் நீர்தேக்கங்களைச் சுற்றியுள்ள தாழ்நில மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவசர அனர்த்த சூழ்நிலைகள் ஏற்பட்டால் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
