ஹோமாகம பொலிஸ் நிலையத்தினால் கைது
செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்களில் 8 பேரிடமும் 09 பொலிஸ் அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற இந்த மரணம் தொடர்பில் பொலிஸார் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சாட்சியங்களையும் பதிவு செய்யும் பணிகளையும் ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், உயிரிழந்த சந்தேகநபருடன் 2026 ஒக்டோபர் 24 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்ட மற்றொரு சந்தேகநபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவைப் பெற்று அவரிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக விசாரணை அதிகாரிகள் ஒக்டோபர் 29 ஆம் திகதி சிறைச்சாலைக்குச் சென்றுள்ளனர்.
இதற்கிடையில், ஒக்டோபர் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர், ஒக்டோபர் 29 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அடையாள அணிவகுப்பிற்காக நவம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சந்தேகநபர் ஒக்டோபர் 24 ஆம் திகதி வீதி விபத்தொன்றில் காயமடைந்து சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் பிற்பகல் 1.05 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அன்றைய தினமே பிற்பகல் 5.55 மணிக்கு அவர் அனுமதியின்றி வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
