Our Feeds


Tuesday, October 20, 2026

Zameera

2030 ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை இலக்கு - விஜித்த ஹேரத்

 

இலங்கை 2030ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 5 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளது என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


நீர்கொழும்பில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி மூலோபாயத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.


 நாட்டின் சுற்றுலாத்துறையை விரிவாக்கம் செய்யும் அதேவேளையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


சுற்றுலா பொலிஸ் பிரிவிற்கு முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் மூலம் பரந்த அதிகாரங்களை வழங்குவதற்கும், சாதாரண பொலிஸ் சேவையிலிருந்து வேறுபட்ட ஒரு சிறப்பு  குழுவை உருவாக்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும்  விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.



மேலும், சுற்றுலா பொலிஸ் பிரிவிற்கு மேலதிக அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்யவும்  அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


நாட்டிற்கு அதிக அளவிலான சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் இன, மத மற்றும் தீவிரவாத மோதல்கள் அற்ற அமைதியான சூழல் அத்தியாவசியமானது என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.


இலங்கையின் சுற்றுலாத்துறை  கொரோனா  பெருந்தொற்றினால் ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருகின்ற போதிலும், நீண்டகால ஸ்திரத்தன்மையை அடைவதற்கு மேலும் முயற்சிகள் தேவைப்படுவதாக  மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் சேர்த்து இலங்கையின் இயற்கை அழகு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் விருந்தோம்பல் பண்பு ஆகியவற்றை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »