Our Feeds


Saturday, October 24, 2026

Zameera

ஆசிரியர் சேவைக்கு 23,800 பேரை இணைத்துக்கொள்வதாக கூறிவிட்டு, தற்போது 17,688 பேரை மாத்திரம் நேர்முக பரீட்சைக்கு அனுமதித்திருப்பது ஏன்? - சாணக்கியன் கேள்வி

 


(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)



ஆசிரியர் சேவைக்கு புதிதாக 23,800 பேரை இணைத்துக்கொள்வதாக ஆரம்பத்தில் குறிப்பட்டபோதும் தற்போது 17,688 பேருக்கு மாத்திரம்  தற்போது நேர்முக பரீட்சைக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? தெரிவுசெய்யும் புள்ளிகள், தகைமை முறைமை மற்றும் பாடப் பின்னணி என்பன எவை? இதற்கான மற்றும் தெரிவான பெயர்ப்பட்டியல் வெளியிடப்படுமா? என இலங்கை தமிழ் அரசுக்  கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.தீவுகள் ஆராயுங்கள்


பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (22) நடைபெற்ற  அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,


ஆசிரிய சேவைக்கு புதிய நியமனங்களை வழங்கும் செயற்பாட்டின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஆறு வருடங்கள் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அவசியம் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.


ஆசிரிய சேவைக்கு புதிதாக 23,800 பேரை இணைத்துக்கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டாலும் நேர்முக பரீட்சைக்காக தற்போது 17,688 பேருக்கு மாத்திரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமும் தெரிவுசெய்யப்படும் பெயர்ப்பட்டியலும் பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை.


ஜனாதிபதி செயலக அலுவலகத்தின் ஊடாக அண்மையில் பாடசாலைகளுக்கு இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலமாக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதோடு, அவர்களின் ஆசிரியர் சேவை கால அவகாசம் பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்தும் அது இன்னமும் செயற்படுத்தப்படவில்லை.


ஆறு வருடங்கள் ஆசிரியர் சேவையில் கல்வி கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாகப் பங்களிப்பு வழங்கிய இந்த உத்தியோகத்தர்களின் சேவையைப் பெற்றுக்கொண்டு, இப்போது அவர்களை வெளியேற்றுவது நியாயமானதா?


ஆசிரியர் சேவைக்கு புதிதாக 23,800 பேரை இணைத்துக்கொள்வதாக ஆரம்பத்தில் குறிப்பட்டபோதும் தற்போது 17,688 பேருக்கு மாத்திரம் நேர்முக பரீட்சைக்காக அனுமதி வழங்குவதற்குக் காரணம் என்ன?தெரிவுசெய்யும் புள்ளிகள், தகைமை முறைமை மற்றும் பாடப் பின்னணி என்பன எவை? இதற்கான மற்றும் தெரிவான பெயர்ப்பட்டியல் வெளியிடப்படுமா?


ஆறு வருடங்கள் மாத்திரம் கற்பித்தலில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நிலைப்பாடு யாது? அவர்களை நிரந்தர ஆசிரியர் பதவிக்கு உள்வாங்குவதற்கான திட்டம் யாது? ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட சேவைக் காலக்கணிப்பு மாற்றப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாதது ஏன்? ஏனைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது எப்போது?



எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அவர்களின் சேவை நிலைமையை மாற்றுவதற்கோ அல்லது கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து வெளியேற்றுவதற்கோ திட்டம் உள்ளதா?அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எவ்வாறு? அபிவிருத்தி உத்தியோகத்தர்களின்  சேவையை மதித்து, அவர்களுக்கு நிரந்தரமான மற்றும் நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாரில்லாவிட்டால், இது தொடர்பில் அடுத்த செயற்பாடுகள் மற்றும் காலக்கெடு என்ன என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »