(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
விசாரணை நடவடிக்கைகள் முடிவடைந்தால் பிணை வழங்குவதே இயல்பாகும். ஆனால் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ளபோதும் அவருக்கு நீதிமன்றில் பிணை வழங்கப்படுவதில்லை. நீதிமன்றத்துக்குள்ளும் நீதி நிலைநாட்டப்படாத நிலையே இருந்து வருகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் டி.பி. சானக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற விசர்நாய்க்கடி நாயை ஒழித்தல் மற்றும் நாய்களை பதிவு செய்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
அரசாங்கத்தின் அனைத்து விடயங்களும் தோல்வியடையும்போது அரசாங்கம் அடக்குமுறையை கையில் எடுத்து வருகிறது. தேரர்களுக்கு எதிராக செயற்பட்டு வருவதுடன் ராஜபக்ஷவினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை தவிர வேறு எதனையும் அரசாங்கம் செய்வதில்லை.
நாமல் ராஜபக்ஷ எந்த சாட்சியும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பொதுவாக ஒருவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டால், அது தொடர்பான விசாரணைகள் முடிவடைந்தால், பிணை வழங்கப்படும். ஆனால் நாமல் ராஜபக்ஷவுக்கு அந்த சட்டம் செயற்படுவதில்லை. இலஞ்ச ஊழல் வழக்குகளில் பிணை வழங்குவதற்கு விசேட காரணம் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் அவருக்கு பிணை வழங்காமல் இருப்பதற்கு விசேட காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. நாமல் ராஜபக்ஷவின் விசாரணைகள் முடிவடைந்தும் அவருக்கு பிணை வழங்கப்படுவதில்லை என்றால், அங்கு அவருக்கு நீதி கிடைப்பதில்லை. நீதிமன்றத்துக்குள்ளும் நீதி கிடைக்காவிட்டால் எங்கு நீதி கிடைக்கப்போவது?
என்றாலும் நீதிமன்றம் தொடர்பில் நாங்கள் இப்போதும் நம்பிக்கை வைக்கிறோம். நீதிமன்றம் தொடர்பில் மக்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள்.
அதேநேரம் அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிக பெரும்பான்மை இருப்பதால், எதனையும் செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கிறது. ஆனால் நாட்டில் இன்று எரிவாயு இல்லை. மத்திய கிழக்கில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது அறிமுகப்படுத்திய கியூ.ஆர் முறை இன்னும் நீக்கப்படாமல் இருக்கிறது.
நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேகம் 4.2ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது இது 5.3ஆகவே இருந்தது. அதேநேரம் நேர் பெருமானத்தில் இருந்த பணவீக்கம் தற்போது மறைபெருமானமாக வீழ்ச்சியடைந்து தற்போது நூற்றுக்கு 8 வீதமாக மாறியுள்ளது.
அதேபோன்று பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. வைத்தியசாலைகளில் மருந்து இல்லை. அரச வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை மேற்கொள்ள பணம் எடுத்துச்செல்ல வேண்டி இருக்கிறது. வைத்தியசாலைகளில் வைத்தியர்களும் ஊழியர்களுமே இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் தரம் குறைந்த நிலக்கறி கொள்வனவு காரணமாக 18 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வெளிவந்துள்ளது. ஆனால் அரசாங்கம் 16 பில்லியன் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. அப்படியானால் எஞ்சிய 2 பில்லியன்களை அரசாங்கம் எவ்வாறு பெற்றுக்கொள்ளப்போகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.
அத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் கொள்கலன்களை விடுவித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். பொலிஸ் மாஅதிபர் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தி மாட்டிக்கொண்டுள்ளார். சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் 50 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய 3 கோடி ரூபா தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகிறது. ஆனால் இலஞ்ச ஊழலை நிறுத்துவதாக அரசாங்கம் தெரிவித்து வருகிறது என்றார்.
