Our Feeds


Saturday, October 24, 2026

Zameera

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத கிழக்கு பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைகளுக்கு அபராதம்

 

சுகாதார நடைமுறைகளைத் தொடர்ச்சியாகப் பின்பற்றத் தவறிய கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலைகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இரு சிற்றுண்டிச்சாலைகளைத் தற்காலிகமாக மூடுமாறும் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் இயங்கி வரும் 3 சிற்றுண்டிச்சாலைகள், சுகாதார அதிகாரிகளால் பலமுறை எச்சரிக்கைகள் மற்றும் அறிவித்தல்கள் வழங்கப்பட்டபோதிலும், உரிய சுகாதார நடைமுறைகளைப் பேணாமல் தொழிற்பட்டு வந்துள்ளன.


இதனையடுத்து, செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் குறித்த சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் 08 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்குகளை விசாரணை செய்த கௌரவ நீதிவான், 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கும் சேர்த்து மொத்தம் 1,50,000ரூபா (ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) தண்டப்பணம் விதித்துத் தீர்ப்பளித்தார்.


மேலும், சுகாதாரக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை, அதில் 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்களுக்குத் தற்காலிகமாக மூடி திருத்த வேலைகளைச் செய்யுமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.


இதேவேளை, நுளம்புகள் பெருகும் வகையில் சூழலைச் சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த நபர்களுக்கு எதிராக வந்தாறுமூலை பொதுச் சுகாதார பரிசோதகரினால் 23.10.2026 அன்று ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.


இவ்வழக்குகளை ஆராய்ந்த நீதிவான், குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 5 பேருக்கும் தலா 10,000 ரூபாய் வீதம் மொத்தம் 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுமாறு உத்தரவிட்டார்.


பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சுகாதார விதிமுறைகளைச் சரிவரப் பின்பற்றி, சூழலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனச் சுகாதாரப் பரிசோதகர்கள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »