ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரும், நிதி அமைச்சின் முன்னாள் செயலாளருமான கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவிடம் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று வாக்குமூலமொன்றைப் பதிவு செய்துள்ளனர்.
நிக்கவரட்டியவில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற ஆணைக்குழுவின் அதிகாரிகள், சுமார் நான்கு மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி இந்த வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.
2009 செப்டெம்பர் முதல் 2015 ஜனவரி வரையிலான காலத்தில் ஜயசுந்தர நிதி அமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளராகப் பணியாற்றியபோதே குறித்த சர்ச்சைக்குரிய எயார்பஸ் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால், அதனுடன் தொடர்புடைய முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆணைக்குழுவின் கவனம் செலுத்தியுள்ளது.
இதேவேளை, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிச் சலவை குற்றச்சாட்டுகள் தொடர்பில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பின்னணியில், ஜயசுந்தரவிடம் பெறப்பட்டுள்ள இந்த வாக்குமூலமானது வழக்கின் புலனாய்வு விசாரணைகளில் முக்கியமானதென தெரிவிக்கப்படுகின்றது.