முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோரப்பட்ட கோரிக்கை தொடர்பாகக் கருத்துக்களை முன்வைப்பதற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது
முன்னாள் ஜனாதிபதி சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் குழு, அவர் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சிங்கப்பூரிலுள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இதய அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, அவருக்கு அங்கு மேலதிக சிகிச்சைகள் தேவைப்படுவதாகச் சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
எனினும், வழக்கின் முறைப்பாட்டாளர்களான குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இதன்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.
இதற்கமைய, வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பான தமது தரப்பு நிலைப்பாட்டை முன்வைப்பதற்காக நவம்பர் 04 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பணித்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பல முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
