Our Feeds


Wednesday, October 28, 2026

SHAHNI RAMEES

புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் முழுமையான மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்தவும்.

 


வடக்கு முஸ்லிம்களின் முழுமையான மீள்குடியேற்றம்

மற்றும் புத்தளம் மாவட்டத்தில் நிரந்தரமாக வாழும் வடக்கு முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கை மனு


மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,

1990ம் ஆண்டு வடக்கு தாயக மண்ணில் இருந்து புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் முழுமையான மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கும், ஏனைய மாவட்டங்களில் நிரந்தரமாக வாழும் வடக்கு முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோருதல்.


1990ஆம் ஆண்டு வட மாகாணத்திலிருந்து 75000ற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அதனை அப்போதிருந்த அரசாங்கமும் முப்படையினரும் கை கட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

அன்றைய வெளியேற்றத்தின் போது பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர் புத்தளம் மாவட்டத்தில் தஞ்சமடைந்தனர்.  வெளியேற்றப்பட்டு அவர்கள் தஞ்சம் புகுந்த பகுதிகளிலும் கூட அரசாங்கம் அம்மக்களுக்கான எந்த ஒரு அத்தியாவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முன் வரவில்லை. ஆனால் அம் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய உதவிகளை புத்தளம் மாவட்ட மக்களும் தனியார் நிறுவனங்களும் முன் நின்று செய்தனர். அதற்காக அவர்களுக்கு இன்று வரை நாம் கடமைப்பபற்றிருக்கின்றோம்.


சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக மீள்குடியேற்றச் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் ஊடாக அரச வளங்களின் குறிப்பிட்ட ஒதுக்கீடுகள் சில மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தச் செயலணி மூடப்பட்டது.


மேலும், மீள்குடியேற்றம் நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்பட்டு, 2014ஆம் ஆண்டில் மீள்குடியேற்ற அமைச்சும் மூடப்பட்டது. எனினும், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதே யாதார்த்தம்.  இதுவரை அவர்களின் மீள்குடியேற்றத் தேவைகள் தொடர்பாக முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், பல குடும்பங்கள் நீண்டகாலமாக இடம்பெயர்க்கப்பட்ட நிலையில் பாதிப்புகளை அனுபவித்து வருகின்றன. இம்மக்களின் முதலாம் தலைமுறையைச் சேர்ந்த பலரும் உயிரிழந்து விட்டனர் என்பது இப்பிரச்சினையின் அவசரத்தன்மையை மேலும் உணர்த்துகிறது.


எனவே, தங்களது தலைமையிலான தற்போதைய அரசாங்கம் இப்பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையிலும் நீதி மற்றும் சமத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையிலும் அணுகி, பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


1. முழுமையான விசாரணை: 

1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற நிலை, அவர்களின் தற்போதைய தேவைகள் மற்றும் இதுவரை நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் தொடர்பாக விரிவான விசாரணை ஒன்றை முன்னெடுக்கப்பட வேண்டும்.


2. மீள்குடியேற்றத்திற்கான விசேட பொறிமுறை: 

வடக்கில் மீண்டும் மீளக் குடியேற விரும்பும் மக்களுக்கு உதவுவதற்காக, ஜனாதிபதியின் தலைமையில் அல்லது உரிய அமைச்சின் கீழ் விசேட மீள்குடியேற்றச் செயலணி, ஆணைக்குழு அல்லது பொருத்தமான நிர்வாகப் பொறிமுறை ஒன்றை ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உருவாக்கப்பட வேண்டும்.


3. மீள்குடியேற்ற உதவிகள்: 

வடக்கிற்கு மீளத் திரும்ப விரும்பும் குடும்பங்களுக்கு வீடமைப்பு, காணி உரிமை, அடிப்படை வசதிகள், வாழ்வாதாரம் மற்றும் ஏனைய அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்கான நடைமுறைத் திட்டமொன்றை உருவாக்க வேண்டும்.


4. புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களின் உரிமைகள்: 

புத்தளம் மாவட்டத்தில் தஞ்சமடைந்து, தற்போது நீண்ட காலமாக வாழ்ந்து வரும் வட மாகாண முஸ்லிம் மக்களின் உண்மையான குடியிருப்பு நிலை மற்றும் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குத் தேவையான அரச சேவைகள், அபிவிருத்தி வாய்ப்புகள் மற்றும் நியாயமான அரச வள ஒதுக்கீடுகள் கிடைப்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.


5. சமத்துவமும் சமூக நல்லிணக்கமும்:

வடக்கிற்குத் திரும்ப விரும்புவோரின் மீள்குடியேற்ற உரிமையையும், புத்தளத்தில் நிரந்தரமாக வாழ விரும்புவோரின் வாழ்வுரிமை மற்றும் சமூகப் பொருளாதாரத் தேவைகளையும் மதித்து, இரு தரப்பினருக்கும் நீதி கிடைக்கும் வகையில் நிலையான சக வாழ்வொன்றுக்கான தீர்வொன்றை ஏற்படுத்துல் வேண்டும்.


6. சில அண்மைக்காலமான தரவின் படி யாழ் முஸ்லிம்களது மீள்குடியேற்றம் 20 சதவீதம் கூட நடைபெறவில்லை. காரணம் அவர்களுக்கான காணிகள் வழங்கி அவர்களுக்கான வாழ்விடங்கள் அமைக்கப்படாமையே ஆகும். எனவே அதனை ஆய்வுக்குட்படுத்தி திட்டத்தை இப்போதைய அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.


7. 2014ம் ஆண்டு முழுமையாக வடக்கு மீள்குடியேற்றம் முடிந்து விட்டது எனக் கூறி மீள்குடியேற்ற அமைச்சு மூடப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. எனவே ஏற்கனவே இருந்த மீள்குடியேற்ற அமைச்சு தொடர்பான முழுமையான விசாரனை ஆரம்பிக்கபட்டு பாதிப்புக்குள்ளாக்ப்பட்ட மக்களுக்கு தீர்வு வழகப்பட வேண்டும். அதன் செயற்பாட்டினை இழப்பீட்டு ஆணைக்குழு ஊடாக ஏனைய இடம்பெயர்க்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் அத்தனை சலுகைகளும் வடக்கு முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.


8. பழைய IDP's அதாவது நீண்டகால உள்நாட்டில் இடம்பெயர்க்கப்பட்வர்கள் என்ற ஆய்வறிக்கை ஒன்று 2018ம் ஆண்டு அப்போதிருந்த அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது. அந்த அறிக்கை அரசாங்கம் அங்கீகரித்து இழப்பீட்டு ஆணையகம் ஊடாக கொள்கைத் திட்டங்களை வகுக்க வேண்டும்.


வடக்கு முஸ்லிம் மக்களின் பிரச்சினை வெறுமனே இடம்பெயர்வு தொடர்பான ஒரு பிரச்சினை மட்டுமல்ல. அது அவர்களின் வாழ்வாதாரம், காணி உரிமை, கல்வி, சமூகப் பாதுகாப்பு, அடையாளம் மற்றும் எதிர்காலத் தலைமுறைகளின் நலன் ஆகியவற்றுடன் தொடர்புடைய நீண்டகால மனிதாபிமானப் பிரச்சினையாகும்.


எனவே, இப்பிரச்சினையைத் தாமதமின்றி ஆராய்ந்து, பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பங்களுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து, நடைமுறைச் சாத்தியமான நிரந்தரத் தீர்வொன்றை ஏற்படுத்தித் தருமாறு தங்களிடம் அன்புடனும் பணிவுடனும் வேண்டுகோள் விடுக்கிறோம்.


புத்தளம் Hope Sri Lanka (Puttalam Hope Sri Lanka) அமைப்பானது, இம்மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளது. இலங்கையர் என்ற அடிப்படையில், தேசிய ஒற்றுமை, சமத்துவம், சமூக நல்லிணக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் ஆகியவற்றை முன்னிறுத்தி, தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எப்போதும் தயாராக இருப்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


தங்களது தலைமையிலான அரசாங்கம் இக்கோரிக்கையை மனிதாபிமானத்துடனும் நீதியுடனும் பரிசீலித்து, பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம் மக்களுக்கு உரிய நிவாரணத்தையும் நிரந்தரத் தீர்வையும் பெற்றுத்தரும் என நம்புகிறோம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »