(நமது நிருபர்)
விலை அதிகரிப்புத் தொடர்பாக தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விரைவில் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவிக்கையில்,
குறிப்பாக கூட்டுத்தாபனத்தின் நிலையங்கள் எவையும் இல்லாத பகுதிகளில் புதிய எரிபொருள் நிலையங்களைத் திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவை ஏற்படும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தனியார் நிறுவனங்கள் மட்டுமே இயங்கும் பகுதிகளில், இந்த நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளமையால் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. பொதுமக்கள் சிரமப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாங்கள் எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்போம் என தெரவித்தார்.
வெளிமாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் தனியார் நிறுவனங்களின் தற்போதைய ஏகபோக உரிமையால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு இணையாக கூட்டுத்தாபனத்தின் நிலையங்களையும் இயங்கச் செய்வதன் மூலம் அந்த ஏகபோகத்தை உடைக்க வேண்டும் எனவும் எரிசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள 1440 எரிபொருள் நிலையங்களில், ‘செப்பேட்கோ’ நிறுவனம் 887 நிலையங்களை இயக்குகிறது. ஏனையவை தனியார் நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன் அதற்கமைய லங்கா ஐ.ஓ.சி 273 நிலையங்களையும், சினோபெக் எனர்ஜி லங்கா 150 நிலையங்களையும், ஆர்.எம். பார்க் 130 நிலையங்களையும் இயக்குகின்றன. நாட்டிலுள்ள டீசல் விநியோகம் மற்றும் வழங்கலில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை சி.பி.சி கையாள்கிறது.
இந்த வாரம் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதுடன், சில நிலையங்கள் மூடப்பட்டிருந்தமையும் அவதானிக்கப்பட்டது.
இதனிடையே, விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை முறியடிக்கும் வகையில், ஒப்பந்தங்களின் கட்டமைப்பு மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் கீழ் அமைச்சுக்குரிய அதிகாரங்களுக்கு உட்பட்டு சட்ட ஆலோசனை நாட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் தங்களது செலவுகளை ஈடுகட்டுவதற்காக எரிபொருள் விலைகளை உயர்த்த தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கருணாதிலக தெரிவித்தார்.
எனினும், இந்தத் தனியார் எரிபொருள் நிறுவனங்கள் தங்களது செலவுகளை ஈடுகட்ட விலையை உயர்த்தும் தெரிவை நடைமுறைப்படுத்தாது, மாறாக சி.பி.சி அறிவித்த விலைகளுக்கு அருகிலேயே தமது விலைகளைப் பேணி வருவதுடன் எரிபொருள் விநியோகத்தையும் கட்டுப்படுத்தியுள்ளன.
அவர்களிடம் போதுமானளவு கையிருப்பு உள்ளது, ஆனால் உகந்த மட்டத்தில் விநியோகிக்கவில்லை. இதுவே வரிசைகள் உருவாகக் காரணமாகியுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சகம் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலியத் தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் டீசல், திறப்பிகள், மின்கலங்கள் , பராமரிப்பு மற்றும் ஊழியர்களின் ஊதியங்கள் உள்ளிட்ட வணிகத்தை இயக்குவதற்கான செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் போக்குவரத்துக் கட்டணங்களில் திருத்தத்தை எதிர்பார்க்கிறது
அதன் தலைவர் ஏ.எம்.எச். அதிகாரியின் கூற்றுப்படி, சங்கம் குறைந்தபட்சம் 20 சதவீத அதிகரிப்பை எதிர்பார்க்கிறது.
