Our Feeds


Monday, October 5, 2026

Zameera

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் 9,150 சிறுவர்களும் இளைஞர்களும் கைது


  (செ.சுபதர்ஷனி)


2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், பல்வேறு போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 8 தொடக்கம் 21 வயதுக்கும் இடைப்பட்ட 9,150 சிறுவர்களும் இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 8,932 ஆண்களும், 173 இளம் பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்தார்.


பொலிஸ் ஊடகப் பிரிவில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


"நாட்டை போதைப்பொருளிலிருந்து முற்றாக ஒழிப்பதே எமது பிரதான நோக்கமாகும். இதற்காக பொலிஸார், முப்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படைப்பிரிவு மற்றும் அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்து வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றன. எனினும், கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப்பகுதியில் 8 முதல் 14 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 9,150 சிறுவர்களும் இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை கவலைக்குரியது.



குறிப்பாக இணையவழிச் சந்திப்புகள் மற்றும் முறையற்ற உறவுகள் இதற்குப் பங்களித்துள்ளன. பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு அவசியமானதுடன், அன்பு மற்றும் கரிசனை குறையும் போது அவர்கள் தவறான வழிகளுக்குச் செல்கின்றனர். போதைப்பொருளினால் மனம் விகாரமடைந்து 2024 இல் 104 ஆண்களும் 2 பெண்களும், 2025 இல் 173 ஆண்களும் 3 பெண்களும், இவ்வாண்டில் இதுவரை 34 ஆண்களும் 1 பெண்ணும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.


முழுநாடு ஒன்றாக எனும் தேசிய ரீதியிலான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு 11 மாதங்கள் பூர்த்தியாகியுள்ளன. அதற்கமைய இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,339 கிலோ கிராம் ஹெரோயின், 3,270 கிலோ கிராம் ஐஸ், 295 கிலோ கிராம் கொக்கைன் மற்றும் 4.5 இலட்சம் போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், 28,808 சோதனைகள் மூலம் 28,834 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3,619 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


சட்டவிரோத மான முறையில் ஈட்டப்பட்ட சொத்துகள் தொடர்பில் 434 பேருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2024 முதல் தற்போது வரை ரூபா 4,445 மில்லியன் பெறுமதியான சொத்துகளை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு 2,536 பேர் புனர்வாழ்வு மத்தியநிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »