Our Feeds


Monday, October 5, 2026

Zameera

ஞானசார தேரரை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

 

பிடியாணை உத்தரவுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை இன்று (05) திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு  கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர், கொழும்பு மேலதிக நீதிவானின் சேம்பர்ஸில் முன்னிலைப்படுத்தப்பட்டதை  அடுத்து, இன்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.


மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ஆகியவற்றால் வழங்கப்பட்ட நிலுவையில் உள்ள பிடியாணை உத்தரவுகளின் அடிப்படையிலேயே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.


கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஞானசார தேரர், அதன் ஆச்சிரமத்தில் தங்கியிருந்ததாகக் கூறிய அவரது சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன, 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஞானசார தேரருக்குச் சிறப்புப் பாதுகாப்பு வழங்கிடப் பரிந்துரைத்துள்ளதால், விளக்கமறியலில் அவருக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரினார்.



ஞானசார தேரரின் பாதுகாப்பை உறுதி செய்யச் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மேலதிக நீதிவான், மேன்முறையீட்டு நீதிமன்ற பிடியாணைத் தொடர்பில் அவரை இன்றையதினம் மேன்முறையீட்டு நீதிமன்றிலும், கொழும்பு நீதிவான் நீதிமன்ற பிடியாணைத் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை கொழும்பு நீதிவான் நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »