Our Feeds


Friday, October 2, 2026

Zameera

எரிபொருள் விலைச் சூத்திரத்துடன் தொழிலாளர் சம்பளத்துக்கும் மாற்றம் அவசியம் – தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம்


 (க.சிவலிங்கமூர்த்தி)


எரிபொருள் விலை அதிகரிப்பால் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் அதிகரிக்கும் நிலையில், எரிபொருளுக்கு விலைச் சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படுமானால் தொழிலாளர்களின் சம்பளத்துக்கும் அதற்கேற்ப மாற்றமடையும் வகையில் விலைச் சூத்திரம் உருவாக்கப்பட வேண்டும் என தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.


கொழும்பில் வியாழக்கிழமை (01) ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலாளர் துமிந்த நாகமுவ மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கம் நாட்டின் அனைத்து துறைகளிலும் ஏற்படுகின்றது. எரிபொருள் பொருளாதாரத்தின் பிரதான இயக்கியாக இருப்பதால், அதன் விலை அதிகரிக்கும்போது அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் அதிகரிக்கின்றன. இதனால் பணவீக்கமும் அதிகரித்து, மக்களின் வாழ்க்கைச் செலவு மேலும் உயர்கின்றது.


சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புடைய தரப்பினர் எரிபொருளுக்கு விலைச் சூத்திரம் அவசியம் என தெரிவிக்கின்றனர். எரிபொருளுக்கு விலைச் சூத்திரம் அவசியம் என்றால், தொழிலாளர்களின் சம்பளத்துக்கும் விலைச் சூத்திரம் அவசியமாகும். எரிபொருள் விலை அதிகரிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கேற்ப சம்பளமும் அதிகரிக்கும் வகையில் இந்த முறைமை உருவாக்கப்பட வேண்டும்.


உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பதால் இலங்கையிலும் விலை அதிகரிப்பதை புரிந்துகொள்ள முடியும். ஆனால், அதனால் ஏற்படும் பொருளாதார அழுத்தத்தை தொழிலாளர்கள்மீது மாத்திரம் சுமத்த முடியாது. எரிபொருள் விலை அதிகரிக்கும்போது பேருந்துக் கட்டணம் உள்ளிட்ட போக்குவரத்துச் செலவுகளும், சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கின்றன. ஆனால், தொழிலாளர்களின் வருமானம் அதே வேகத்தில் அதிகரிப்பதில்லை.


பல வருடங்களாக தொழிலாளர்களின் உண்மையான வருமானம் குறைந்து வரும் நிலையில், வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரிக்கின்றது. எனவே, எரிபொருள் விலைச் சூத்திரத்துடன் இணைந்த வகையில் சம்பளத்துக்கும் விலைச் சூத்திரத்தை உருவாக்கி, விலை அதிகரிப்புக்கு ஏற்ப தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இல்லையெனில் எரிபொருள் விலை உயர்வின் ஒவ்வொரு கட்டமும் தொழிலாளர்களின் கொள்வனவு சக்தியை மேலும் பாதிக்கும். சந்தை விலைகள் அதிகரிக்கும் போது சம்பளம் மாறாமல் இருப்பது குடும்பங்களின் செலவுத் திட்டத்தை கடுமையாக பாதிக்கிறது. எனவே, விலைகள் மற்றும் வருமானம் தொடர்பில் சமநிலையை ஏற்படுத்தும் நடைமுறை அவசியம். இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்;. எனவே அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »