(செ.கவிஷனா)
சர்வதேச கடன் தரவரிசையில் இலங்கை மீண்டும் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய இலக்குகளையும் தாண்டி அரசாங்கம் வரலாற்று சாதனைகளை படைக்கும் தருணத்தில் கடந்த கால ஜனாதிபதிகள் பலர் தங்களது தனிப்பட்ட விஜயங்களுக்காக மக்களின் வரிப்பணத்தை பெருமளவில் செலவிட்டுள்ளனர் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய சூழலில், இவ்வாறு முன்னாள் ஜனாதிபதிகள் தங்களது தனிப்பட்ட பயணங்களுக்காக அரசுப் பணத்தை இலட்சக்கணக்கில் செலவிட்டது குறித்த கேள்விகளுக்கு, சரியான பதில்கள் வழங்க முடியாத நிலையில் திணறி வருகிறார்கள என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹசித நிரோஷசன் தெரவித்துள்ளார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (02) ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலொன்றில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நெருக்கடியான நிலையை அடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரத்தை முறையான திட்டமிடல் மற்றும் சீரான நிர்வாகத்தின் மூலம் மீண்டும் வலுவான நிலைக்கு தற்போதை அரசு கொண்டுவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனம் நாட்டின் கடன் தரவரிசையை B பிளஸ் மட்டத்துக்கு உயர்த்தியுள்ளது. எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் பொருளாதாரம் சில மாதங்களில் வீழ்ச்சியடையும் என தெரிவித்து வந்த போதிலும் திறம்பட செயல்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் கடன் தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னெற்றம் கண்டுள்ளது.
சர்வதேச நிதியம் நிர்ணயித்த இலக்குகளையும் தாண்டும் வகையில் அரசாங்கம் பொருளாதார சாதனைகளைப் பதிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான அரச வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.3 சதவீதமாக கொண்டு வருவதே சர்வதேச நாணய நிதியத்தின் இலக்காக இருந்தபோதிலும் அரசாங்கம் 16.7 சதவீதமாக உயர்த்திக் காட்டியுள்ளது. அதேபோல நாட்டின் முதன்மை நிலைக் கணக்கு சேமிப்பை 5.4 சதவீதமாக அதிகரிக்க முடிந்துள்ளது. பொய்யான புள்ளிவிபரங்களை காட்டாமல் நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தியதன் விளைவாகவே குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது.
கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், அரச தலைவர் என்ற பதவியைப் பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதிகள் பலர் தங்களது தனிப்பட்ட விஜயங்களுக்காக மக்களின் வரிப்பணத்தை பெருமளவில் செலவிட்டுள்ளனர் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய சூழலில், இவ்வாறான முன்னாள் ஜனாதிபதிகள் தங்களது தனிப்பட்ட பயணங்களுக்காக அரசுப் பணத்தை இலட்சக்கணக்கில் செலவிட்டது குறித்த கேள்விகளுக்கு, அவர்களால் பதில் கூற முடியாமல் போயுள்ளது
இவ்வாறான நாட்டை அழிவின் பாதைக்கு இட்டுச் சென்ற ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளின் வரலாற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு மக்களுக்கு சொந்தமான புதிய அரசாங்கம் கட்டியெழுப்பப்பட்டது. எதிர்கால சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பாதுகாப்பானதும் அழகானதுமான எதிர்காலத்தை உருவாக்கி தரும் வகையில் அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டங்கள் ஊடாக மிகச் சிறந்த வெற்றிகரமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்துக்காக உண்மையாக ஏதேனும் செய்ய முடிந்துள்ளது.